தருமபுரியில் பாதுகாப்பு உபகரணம் இன்றி துப்புரவு பணியாளரை,கழிவுநீர் கால்வாயில் இறங்கி கால்வாய் சுத்தம் செய்ய வைத்துள்ளார் தருமபுரி நகராட்சி ஆணையாளர்.
தருமபுரி நகராட்சியில் 33-வார்டுகள் உள்ளன. நகராட்சியில் உள்ள வார்டுகளில் உள்ள குப்பை மற்றும் கழிவுநீர் கால்வாயை சுத்தம் செய்யும் பணிக்காக 50-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனர். தற்போது தருமபுரியில் உள்ள மக்கள் தொகைக்கு துப்புரவு பணியாளா்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாகவும், குறைந்த பணியாளா்களை வைத்து அதிகமான வேலையை சுமத்துவதாக பணியாளா்கள் வருத்தம் தெரிவிக்கின்றனா்.
இந்நிலையில் நேற்று இரவு தருமபுரி மாவட்ட முழுவதும் இடி மின்னலுடம் பலத்த மழை பெய்தது. இதனால் தருமபுரி-சேலம் பிரதான சாலையில் நெசவாளா் காலணியில் மழை வெள்ளத்தால் சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீா் தேங்கி சாலையில் வழிந்தோடியது. அதனை சீா் செய்ய, நகராட்சி ஆணையாளர் துப்புரவு பணியாளரை அழைத்து வந்து, அடைப்பை சரி செய்ய வைத்துள்ளார். இந்தப் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர் எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இல்லாமல், துப்புரவு பணியாளர் கழிவுநீர் கால்வாயில் இறங்கி கையால் அடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.
துப்புரவு பணியாளர் பணி செய்வதை தருமபுரி நகராட்சி ஆணையாளா் கிருஷ்ணகுமார் நேரடியாக பார்த்துக் கொண்டு வேலை செய்ய அறிவுறுத்தி கொண்டிருந்தார். துப்புரவு பணியாளர்களுக்கு, பாதுகாப்பாக பணி செய்ய தேவையான பாதுகாப்பு உபகரணாங்களை அரசே வழங்கி வரும் நிலையில், தருமபுரி நகராட்சியில் துப்புரவு பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்கப்படவில்லை. ஒரு சிலருக்கு மட்டும் வழங்கப்பட்ட உபகரணங்கள் தரமானதாக இல்லாத்தால், அதை பயன்படுத்த முடியாமல் இருப்பதாக தெரிவிக்கின்றனர். மேலும் உபகரணம் இல்லாமல், கால்வாயில் இறங்கி பணி செய்ய அதிகாரிகள் வலியுறுத்துவதாலே, இப்படி செய்வதாக பணியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இன்று மே முதல் நாள், உழைப்பாளா் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், தருமபுரி நகராட்சி ஆணையாளர், துப்புறவு பணியாளா் பாதுகாப்பு உபகரணம் ஏதும் இன்றி கழிவுநீர் கால்வாயில் இறங்கி பணி செய்ய வைத்த அவலம் தருமபுரியில் அரங்கேறியுள்ளது.