’பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க உள்ளோம்’ - கமிஷனர் மகேஷ் குமார்

’பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க உள்ளோம்’ - கமிஷனர் மகேஷ் குமார்
’பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க உள்ளோம்’ - கமிஷனர்  மகேஷ் குமார்

பதற்றமான வாக்குச்சாவடிகளை சிசிடிவி மூலம் கண்காணிக்க உள்ளதாக சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.

சென்னையில் சட்டமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிகள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு செய்து வருகிறார். அதன்படி சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதிக்குட்பட்ட ஐஸ் ஹவுஸ் உருது பள்ளியில் அமைக்கப்பட உள்ள வாக்குச்சாவடி மையத்தை இன்று காலை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு செய்தார். ஐஸ் ஹவுஸ் பதற்றமான வாக்குச்சாவடி. அதனால், கூடுதல் ஆணையர் கண்ணன், இணை ஆணையர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் சஷாங் சாய் ஆகியோருடன் பாதுகாப்பு ஏற்பாடு குறித்து அறிவுரை வழங்கினார்.

இதைப்போல சூளைமேடு, ஐ.சி.எப், கொளத்தூர் நுங்கம்பாக்கம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பராமரிக்கப்படும் பாதுகாக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார்.ன்அதன்பிறகு, பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் ஆகிய 6 தொகுதிகளில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படும் இடமான நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் அமைக்கப்பட உள்ள வாக்கு எண்ணும் மையத்தை மகேஷ் குமார் அகர்வால் ஆய்வு செய்தார்.

இதைனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "சென்னையில் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையில் ரூ. 6.85 கோடி பணம் இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ. 15 கோடி மதிப்பிலான 30 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 1751 ரவுடிகள் மீது குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உரிமம் பெற்ற துப்பாக்கிகள் சென்னையில் 2767 உள்ளது. 1796 துப்பாக்கிகள் தேர்தலையொட்டி ஒப்படைக்கப்பட்டுள்ளது. 967 துப்பாக்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுவரை 5 துப்பாக்கிகள் ஒப்படைக்கப்படவில்லை.

2 கம்பெனி துணை ராணுவத்தினரின் சென்னைக்கு வந்துள்ளனர். 46 இடங்களில் துணை ராணுவத்தினரின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. 307 இடங்களில் 1216 பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 10 இடங்களில் 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் துணை ராணுவத்தினரை பணிக்கு அமர்த்தி கூடுதல் பாதுகாப்பை உறுதிப்படுத்த உள்ளோம்.

பதற்றமான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள பகுதிகளில் ரவுடிகள் பட்டியலை எடுத்து காவல் நிலையத்திற்கு வரவைத்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் கீழ் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து வாங்கி எச்சரித்து அனுப்பி உள்ளோம்.

மின்னணு வாக்கு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு மாநகராட்சி சார்பில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி காவல்துறை கண்காணிக்க உள்ளனர். கட்டுப்பாட்டு அறை அமைத்தும் கண்காணிக்க உள்ளோம். மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், பதற்றமான வாக்குச்சாவடிகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மாநகராட்சி அதிகாரிகள் உதவியோடு கண்காணிக்க காவல்துறை திட்டமிட்டுள்ளது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com