’அம்மாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா முடிவை அறிவித்துள்ளார்’ – கே.பி முனுசாமி
’அம்மாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா முடிவை அறிவித்துள்ளார்’ – கே.பி முனுசாமி
அரசியல் இருந்து விலகுவதாக சசிகலா அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘’நான் அரசியலைவிட்டு ஒதுங்கியிருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி அமைய பிரார்த்திப்பேன். நான் என்றும், பதவிக்காகவோ, பட்டத்திற்காகவோ, அதிகாரத்திற்காகவோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்பு தொண்டர்களுக்கும், தமிழக மக்களுக்கும் நான் நன்றியுடன் இருப்பேன்.
ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவரின் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேன். ஜெயலலிதா ஆட்சி தொடர உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் தேர்தல் பணியாற்றவேண்டும். நம் பொது எதிரி திமுகவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து ஜெயலலிதா ஆட்சி அமைய பாடுபட வேண்டும். என்மீது அன்பும் அக்கறையும் காட்டிய ஜெயலலிதாவின் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி’’ என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து அதிமுகவின் துணை ஒருங்கிணைப்பாளர் கேபி.முனுசாமி புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில், ”ஜெயலலிதாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில் சசிகலா தனது முடிவை அறிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி வரக்கூடாது என நினைப்பவர் டிடிவி தினகரன். ஜெயலலிதாவின் விசுவாசியாக இருப்பதாக சசிகலா கூறியது மகிழ்ச்சிதான்.
அதிமுகவில் சசிகலா சேர்க்கப்படுவாரா என்ற கேள்விக்கு காலம்தான் பதில் சொல்லும்” என்று கேபி முனுசாமி தெரிவித்துள்ளார்.