“சிவனால் நடந்தது; கனிமொழியால் அல்ல”- முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
குலசேகரபட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க நிலம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
நேற்று சட்டசபையில் விவாதம் நடைபெற்றது. அதில் பேசிய திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன், குலசேகரபட்டனத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான அனுமதியானது நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தொடர்முயற்சியால் கிடைத்துள்ளது. அதற்கான பணிகளை துரிதப்படுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பழனிசாமி, “ராக்கெட் தளம் அமைப்பதற்கான அனுமதியானது கனிமொழியால் கிடைக்கவில்லை. தமிழகத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்க வேண்டும் என இஸ்ரோ தலைவர் சிவன் என்னிடம் கோரிக்கை வைத்தார். அதனைத்தொடர்ந்து இந்த கோரிக்கை தொடர்பாக பிரதமர் மோடியிடம் நான் பேசினேன். ராக்கெட் ஏவுதளத்தை தமிழகத்தில் அமைக்க வேண்டும் என பிரதமரிடம் நான் கோரிக்கை வைத்தேன். அதன்படி திட்டம் கொண்டுவரப்பட்டது. அத்துடன் அதற்கான நிலமும் ஒதுக்கப்பட்டது” என்றார்.
இதனைத்தொடர்ந்து பேசிய அனிதா ராதாகிருஷ்ணன், தமிழகத்தின் தென் பகுதியில் எந்த ஒரு பெரிய நிறுவனங்களும் இல்லை எனவும் பெரும்பாலான நிறுவனங்கள் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருக்கிறது என்றார். இதனால் தென் பகுதியில் உள்ள இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமால் தவிக்கின்றனர் எனவும் எடுத்துக் கூறினார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் மு.சி.சம்பத் “தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களை குவைத்தில் அமைந்துள்ள ஒரு தனியார் நிறுவனத்துடன் அரசு மேற்கொண்டுள்ளது. இதற்கான வேலைகள் இன்னும் இரண்டு மாதத்தில் தொடங்க இருக்கிறது. இதன் மூலம் நேரடியாக 5000 நபர்களுக்கும் மறைமுகமாக 10,000 நபர்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றார். இதற்காக 700 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.