“நிர்பந்தத்தினாலேயே குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவளித்தோம்” - அதிமுக எம்பி ஓபன் டாக்
நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல; அதிமுக குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவளிப்பதற்குப் பின்னால் கூட்டணி நிர்பந்தங்கள் இருக்கின்றன என அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் கூறியுள்ளார். அவர் ‘தி இந்து’ நாளிதழுக்கு அளித்த பேட்டில் இவ்வாறு கூறி இருக்கிறார்.
குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு அதிமுக மாநிலங்களவை உறுப்பினர்கள் அளித்த ஆதரவு அந்த மசோதா நிறைவேறுவதற்கு ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளது. திமுக உட்பட தமிழக கட்சிகள் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் அதிமுகவின் ஆதரவு பல மட்டங்களில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இதற்கான ஆதரவை அதிமுக ஏன் அளித்தது என்பது குறித்து மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியன் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
நாடு முழுவதும் உள்ள பல மாநில கட்சிகள் இந்தச் சட்டத்திருத்தத்தை எதிர்த்து வரும் வேளையில் இந்த மசோதாவை அதிமுக ஆதரித்தது ஏன்? என்ற கேள்விக்கு, “கட்டாயம்தான் காரணம். பாஜக அணியில் உள்ள அனைத்து கூட்டணி கட்சியினரும் மசோதாவை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். இருந்தாலும் மசோதாவின் குறைபாடுகளை நான் சுட்டிக்காட்டியுள்ளேன். ‘முஸ்லிம்கள்’ என்ற சொல் அதில் இல்லை. எப்படியிருந்தாலும் தவறு என்பது தவறுதான்” என்று கூறியுள்ளார்.
குடியுரிமை மசோதாவை ஆதரிக்குமாறு பாஜக நேரடியாக உங்களுக்கு அழுத்தம் கொடுத்ததா? என்றும் அவரிடம் கேள்வி முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர், “நேரடியாக பாஜக எதையும் செய்யாது. கட்சி அலுவலகத்தில் நாங்கள் இந்த விவகாரம் பற்றி விவாதித்தபோது, செயலகத்தைச் சேர்ந்த துணைச் செயலாளர் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என தொலைபேசியில் என்னிடம் சொன்னார். அவரிடம் எனது கருத்துகளை வெளிப்படுத்துவேன் என்று சொன்னேன். எனது கருத்தை பதிவு செய்ய எனக்கு நிச்சயமாக உரிமை உண்டு என்று அவர் சொன்னார்” என கூறியுள்ளார்.
உங்கள் கருத்துப்படி, அத்தகைய மசோதாவை அறிமுகப்படுத்த பாஜகவைத் தூண்டியது எது?, “பாஜகவின் நோக்கம் ஒரு இந்து ராஷ்டிரீயத்தை (இந்து தேசத்தை) உருவாக்குவதாகும். ஆனால் அது இந்த வார்த்தையை வெளிப்படையாகப் பயன்படுத்தாமல் பல வார்த்தைகளில் சொல்வது. ஒட்டுமொத்த இந்து மக்களுக்கான ஆதரவு தளமாக மாறுவதை இது உறுதி செய்வதில் இது மிகவும் சிறப்பு வகிக்கும்.
இது அவர்களை இந்திய அரசியலில் ஈடுபட முடியாததாக மாற்றும் என்று கட்சி கருதுகிறது. அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், பாஜக தலைவர்கள், குறிப்பாக உள்துறை அமைச்சகத்தை வழிநடத்தும் அமித் ஷா, தனது நிலைப்பாட்டை இந்த நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்” என்றும் குறிப்பிட்டுள்ளார். பாஜக கூட்டணியில் அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் ஒருவர் இவ்வளவு வெளிப்படையாக பேசி இருப்பது கவனிக்கத்தக்கதாக மாறி உள்ளது.