தோனி, யுவராஜை தொப்பி போல திடீரென தூக்கியெறிய முடியாது: எம்எஸ்கே.பிரசாத்
தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரை இந்திய அணியில் இருந்து தொப்பி போல திடீரென தூக்கி எறிய முடியாது என்று தேர்வுக்குழுத் தலைவர் எம்எஸ்கே.பிரசாத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த வெஸ்ட் இண்டீஸ் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய தொடர்களில் பெரிய அளவில் சோபிக்காத சீனியர் வீரர்களான தோனி மற்றும் யுவராஜ் ஆகியோர் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனால், அவர்கள் இருவரின் எதிர்காலம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த எம்எஸ்கே.பிரசாத், இந்திய அணியில் தோனி மற்றும் யுவராஜ் ஆகியோரின் எதிர்காலம் குறித்து திடீரென முடிவெடுக்க முடியாது என்று தெரிவித்தார். 2019ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பை தொடரைக் கணக்கில் கொண்டு இந்திய அணி தயாராகி வருவதாகவும் அவர் கூறினார். இந்திய அணிக்காக ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தோனி மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் விளையாடி வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு நடந்த பார்டர்-கவாஸ்கர் டெஸ்ட் தொடர் நடந்துகொண்டிருந்த போதே டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்தார். ஆனால், அதுபோன்ற எந்த அறிவிப்பையும் யுவராஜ் சிங் வெளியிடவில்லை.

