இலங்கைக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் விளையாட தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 1-0 என வென்றது. இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் நாளை தொடங்குகிறது. முதல் ஒருநாள் போட்டி இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள தர்மசாலாவில் நடக்கிறது. இதற்காக இரு அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். விராத் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதால், ரோகித் ஷர்மா தலைமையில் இந்திய அணி களம் காண்கிறது.
புவனேஷ்வர்குமார், சித்தார்த் கவுல், சாஹேல், அக்ஷர் படேல், ஹர்திக், பும்ரா உள்ளிட்ட இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்தியா, இலங்கை அணி வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.
இந்நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் சேர்க்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக கேதர் ஜாதவ் விலகியதை அடுத்து தமிழக வீரருக்கு இடம் கிடைத்துள்ளது.