அன்று வெறுங்காலில் ஓட்டம், இன்று இலக்கு ஒலிம்பிக்! - 'ஓட்டப் புயல்' ஹீமா தாஸ் பிறந்தநாள்

அன்று வெறுங்காலில் ஓட்டம், இன்று இலக்கு ஒலிம்பிக்! - 'ஓட்டப் புயல்' ஹீமா தாஸ் பிறந்தநாள்
அன்று வெறுங்காலில் ஓட்டம், இன்று இலக்கு ஒலிம்பிக்! - 'ஓட்டப் புயல்' ஹீமா தாஸ் பிறந்தநாள்

‘திங் எக்ஸ்பிரஸ்’ என விளையாட்டு ஆர்வலர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் ஹீமா தாஸ். இன்று அவருக்கு பிறந்தநாள். இதே நாளில் கடந்த 2000-ல் பிறந்தவர் அவர்.

யார் அவர்?

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் மாநிலத்தின் திங் நகராட்சியில் அமைந்துள்ள கந்துளிமரி கிராமம்தான் ஹீமாவின் தாய்மண். பாரம்பரிய விவசாய குடும்பத்தை சேர்ந்த ரோஞ்சித் தாஸுக்கும், ஜோனாலி தாஸுக்கும் நான்காவது மகளாக பிறந்தவர். வீட்டில் அவர்தான் கடைசி பிள்ளை. 

'கடவுள் எனும் முதலாளில் கண்டெடுத்த தொழிலாளி' என எம்.ஜி.ஆரின் பாடல் வரிகளுக்கு ஏற்ப விவசாயத்தை உயிர்மூச்சாக சுவாசிக்கும் ஹீமாவின் அப்பா ரோஞ்சித்துக்கு வயல்வெளியில் ஒத்தாசையாக பணி செய்வதுதான் ஹீமாவின் கடமை. திங் நகரில் இருந்த நகராட்சி பள்ளியில் படித்து வந்த ஹீமாவுக்கு பள்ளி இடைவெளியில் நண்பர்களோடு சேர்ந்து ஆண் - பெண் என்ற வேறுபாடு இல்லாமல் கால்பந்து விளையாடுவதுதான் ஒரே பொழுதுபோக்கு.

பெரும்பாலும் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வளரும் குழந்தைகளுக்கு பிடித்த விளையாட்டும் கால்பந்தாக தான் இருக்கும். ஹீமாவுக்கும் அப்படித்தான்.  நாளடைவில் கால்பந்து விளையாட்டின் மீது ஹீமாவுக்கு ஆர்வம் 'லப் டப், லப் டப்' என தாறுமாறாக எகிற, அதையே தனது கேரியராக அமைத்து கொள்ள விரும்பி கரம்பாக இருக்கும் பயிர் செய்யப்படாத வயல் வெளியில் கால்பந்தாடி கலக்கியுள்ளார் ஹீமா.

அப்படி ஒருநாள் ஹீமா களத்து மேட்டில் வேகமாக ஓடி ஆடி விளையாடியதை பார்த்து வாயடைத்து போன உடற்கல்வி பயிற்சியாளர் சம்சூல் 'நீ ஆட வேண்டியது ஃபுட்பால் கிடையாது. உனக்கு இருக்கும் ஸ்டெமினாவுக்கும், ஆர்ம் துரோவுக்கும் நீ தடகளத்தில் கவனம் செலுத்தினால் சாதிக்க முடியும்' என ஹீமாவிடம் சொல்லி மடைமாற்றி விட்டுள்ளார். 

அதைத் தொடர்ந்து பள்ளி அளவிலும், திங் நகராட்சி அளவிலான ஓட்டப்பந்தய போட்டிகளில் 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் என காலில் ஷூ கூட அணியாமல் வெறுங்காலோடு கலந்து கொண்டு அனைத்திலும் வெற்றி பெற்றுள்ளார் ஹீமா. அதன் மூலம் நாகோன் மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்று அசாம் மாநிலத்தின் பிற மாவட்டஙளை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனைகளோடு போட்டி போட்ட ஹீமா முதல் முறையாக தான் பங்கேற்ற மாவட்டங்களுக்கு இடையிலான போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். அந்த போட்டியில் ஹீமாவின் வேகத்தை பார்த்து அசந்து போன அசாம் மாநில விளையாட்டு கழக இயக்குனரும், தடகள பயிற்சியாளருமான நிப்பான் தாசுக்குள் 'முறையான பயிற்சி கொடுத்தால் ஹீமாவை வைத்து பல சாதனைகள் நம் நாட்டிற்காக படைக்கலாம்' என்ற யோசனை வந்துள்ளது. 

உடனடியாக ஹீமாவின் பெற்றோரை சந்தித்த நிப்பான், 'உங்கள் மகளை பயிற்சிக்காக கவுகாத்தி அனுப்பி வைத்தால் ஆகச்சிறந்த தடகள வீராங்கனையாக வருவார்' என சொல்லி, அவர்களது அனுமதியை வாங்கி தடகள பயிற்சிக்காக தன்னோடு ஹீமாவை கவுகாத்திக்கு அழைத்து சென்றுள்ளார்.

அசாம் மாநில விளையாட்டு கழகத்தில் பெரும்பாலும் கால்பந்து, பளுதூக்குதல், குத்துச்சண்டை மாதிரியான விளையாட்டுகளுக்கு தான் முறையான பயிற்சி கூடங்கள் இருக்கும். தடகளத்திற்கு என தனியாக பயிற்சி மையம் ஏதும் இல்லாத சூழலில் ஹீமாவை அழைத்து கொண்டு சென்ற நிப்பானை 'ஏளனமாக பார்த்துள்ளனர்' அப்போதைய அசாம் விளையாட்டு கழக நிர்வாக உறுப்பினர்களும், பயிற்சியாளர்களும். 'ஹீமாவுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தால் அவரது திறமையை நீங்களே புரிந்து கொள்ளலாம்' என சொல்லியுள்ளார் நிப்பான். 

'சரி ஒரு வாய்ப்பு தானே, கொடுத்து பார்க்கலாம்' என சம்பிரதாய அடிப்படையில் அவர்கள் சம்மதம் தெரிவித்த மறுநிமிடமே தடகளத்தில் தான் யார் என்பதை நிரூபித்து காட்ட 'காற்றையே கிழித்து கொண்டு ஓடும் அளவுக்கு வேகமாக ஓடி' அசத்தினார் பதினாறு வயதேயான ஹீமா. உடனடியாக அசாம் மாநில விளையாட்டு துறை சார்பில் ஹீமா பயிற்சி மேற்கொள்வதற்காக பிரத்யேக பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டன. 

இரண்டு ஆண்டுகள் வீட்டையும், பெற்றோரையும், நண்பர்களையும் மிஸ் செய்த ஹீமா தனது பயிற்சியாளர் நிப்பானின் பயிற்சியின் கீழ் தடகள களத்தில் கடினமாக பயிற்சி மேற்கொண்டார். அதன் மூலம் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.13 வினாடிகளில் கடந்து இந்தியாவின் புதிய வேக புயலாக 2018 ஆம் ஆண்டின் துவக்கத்தில் தடம் பதித்தார். 400 மீட்டர் தூரத்தை வெறும் 51 வினாடிகளில் ஹீமா கடந்து புதிய சாதனை படைத்ததனால் அந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் இந்தியா சார்பில் 400 மீட்டர் தனி நபர் மற்றும் குழு விளையாட்டில் பங்கேற்றார். இதில் 400 மீட்டர் தனி நபர் பிரிவில் இறுதி சுற்று வரை முன்னேறி வெறும் 1.17 வினாடிகள் வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவற விட்டதோடு ஆறாவது இடத்தை பிடித்து அசத்தினார்.

இருந்தாலும் காமன்வெல்த் போட்டியில் கிடைத்த தோல்வி ஹீமாவின் ஆழ்மனதை உருத்திக் கொண்டே இருக்க, அந்த தோல்வியிலிருந்து மீண்டெழ நாள் ஒன்றுக்கு ஆறு மணி நேரத்திற்கும் கூடுதலாக களத்தில் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதன் விளைவு, அந்த ஆண்டு நடைபெற்ற இளையோருக்கான உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீட்டர் ஓட்டத்தில் பந்தய தூரத்தை 51.46 வினாடிகளில் கடந்து புதிய சாதனையை படைத்ததோடு, சர்வதேச தடகள போட்டியில் இந்தியாவுக்கு பெருமை தேடி தந்துள்ளார் ஹீமா. அதுவும் 400 மீட்டர் ஓட்டத்தை மிதமான வேகத்தில் ஓட ஆரம்பித்து தனக்கு முன்னாள் வேகமாக ஓடி கொண்டிருந்த மூன்று பேரை பின்னுக்கு தள்ளி கடைசி சில நொடிகளில் வேகம் எடுத்து தங்கத்தை நம் தமிழ் சினிமா கதாநாயகர்கள் ஸ்டைலில் எதிர்நீச்சல் போட்டு வென்றுள்ளார் ஹீமா. 

'ஹீமா சாதிப்பாள் என எனக்கு தெரியும். ஆனால் இரண்டே ஆண்டில் இந்த இமாலய சாதனையை அடைவாள் என ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பயிற்சியாளராக என மாணவி சாதித்துள்ளதை பார்க்கும்போது பெருமையாக உள்ளது. இதே வேகத்தில் ஹீமா தனது சிறந்த டைமிங்காக உள்ள 51.13 வினாடிகளுக்கும் குறைவாக ஓடி அச்சத்தினால் ஆசிய போட்டிகளிலும், ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியாவுக்காக ஹீமா வெற்றி வாகை சூடலாம்' என்கிறார் ஹீமாவின் பயிற்சியாளர் நிப்பான். 

ஹீமாவின் வெற்றியை யூட்யூபில் பார்த்த அவரது அப்பா ரோஞ்சித் தாஸ் 'என் மகள் நம் நாட்டுக்காக மேலும் பல பதக்கங்களை பெற்று தருவாள் என நம்புகிறேன்' என்று தெரிவித்துள்ளார்.

பின்லாந்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் 'ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வது தான் எனது ஒரே இலக்கு' என ஹீமா சொல்லியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து அதே ஆண்டில் ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற ஆசிய போட்டிகளிலும் (2018) தனி நபர் மற்றும் கலப்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார் ஹீமா. 

உங்களது கனவு மெய்ப்பட வாழ்த்துகள் ஹீமா!   

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com