ஐபிஎல் 2020: வாகை சூட‌ காத்திருக்கும் வளரும் நட்சத்திரங்கள் !

ஐபிஎல் 2020: வாகை சூட‌ காத்திருக்கும் வளரும் நட்சத்திரங்கள் !

ஐபிஎல் 2020: வாகை சூட‌ காத்திருக்கும் வளரும் நட்சத்திரங்கள் !
Published on

சாதிக்கத் துடிக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் பலரை அடையாளப்படுத்தும் களமாக ஐபிஎல் தொடர் இருந்து வருகிறது. அந்த வகையில், நடப்புத் தொடரில் நாயகர்களாக உருவெடுப்பார்கள் எனக் கணிக்கப்படும் வீரர்கள் யார் யார்?

ஜஸ்பிரித் பும்ரா, ரவீந்திர ஜடேஜா,‌ ரவிச்சந்திரன்‌ அஷ்வின், ஹர்திக் பாண்ட்யா, தீபக் சஹார் உள்ளிட்ட வீரர்களை உலகிற்கு அடையாளம் காட்டிய க‌ளம் ஐபிஎல். இந்த வரிசையில் இணையவுள்ள இந்திய இளம் வீரர்களில் முதன்மையில் இருப்பவர் 'யங் ஸ்டார்' யஷாஸ்வி ஜெய்ஸ்வால். நடப்புத் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அறிமுகமாகும் யஷாஸ்வி ஜெய்ஸ்வால், நடந்து முடிந்த இளையோர் உலகக்கோப்பையில் அதிக ரன்கள் குவித்த வீரராக திகழ்கிறார். பானி பூரி விற்று கிரிக்கெட் பயிற்சி எடுத்துக் கொண்ட இவர், ஐபிஎல்லில் ஜொலித்தால் தேசிய அணிக்கான கதவுகள் நிச்சயம் திறக்கும்.

இளையோர் உலகக்கோப்பை மூலம் அடையாளம் பெற்ற மற்றொரு இளம் வீரர் ரவி பிஷ்னோய். பஞ்சாப் அணியின் பிரதான சுழற்பந்து வீச்சாளராக பார்க்கப்படும் இவர், கூக்ளி பந்துகளின் கூகுளாக இருக்கும் கும்ப்ளேவின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். இவர், நடப்பு சீசனில் ராஜ நடை போடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெங்களூரு அணியின் பேட்டிங்கை வலுப்படுத்த சேர்க்கப்பட்டு இருப்பவர் ‌தேவ்தத் படிக்கல். நடந்து முடிந்த சையது முஷ்டாக் அலி தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரரான இவர், ஐபிஎல்லில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பவர் ப்ளேவில் பட்டையை கிளப்பும் பந்துவீச்சாளராக இருப்பவர் கார்த்திக் தியாகி. ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சு கோட்டையை பலப்படுத்தும் துருப்புச்சீட்டான இவர், 14‌0 கிமீ வேகத்தில் பந்து வீசும் திறன் பெற்றவர். வேகத்துடன் விவேகமும் இணைந்து துல்லியமான பந்துகளை வீசினால், இவர் ஐபிஎல்லில் விக்கெட் அறுவடை செய்வது எளிது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள சாய் கிஷோர், ரிதுராஜ் காய்க்வாட் ஆகியோர் நம்பிக்கையளிக்கும் நட்சத்திரமாக இருக்கிறார்கள். ‌நடப்புத் தொடரில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ளதால், அதிரடி பேட்ஸ்மேனான் கெய்க்வாட் ஆடும் லெவனில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அமீரக ஆடுகளங்கள் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருப்பதால், சாய் கிஷோரின் சாதனைப் பயணம் ஐபிஎல்லில் இருந்து தொடங்கலாம்‌ எனக் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com