‘யார்க்கர் ராஜா’ தமிழக வீரர் நடராஜனின் கதை

‘யார்க்கர் ராஜா’ தமிழக வீரர் நடராஜனின் கதை
‘யார்க்கர் ராஜா’ தமிழக வீரர் நடராஜனின் கதை

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிராக அபாரமாக பந்துவீசி அசத்தியிருந்தார் தமிழகத்தை சேர்ந்த இடக்கை வேகப்பந்து வீச்சாளர் தங்கராசு நடராஜன். 

அந்த ஆட்டத்தில் 24 பந்துகளில் 12 பந்துகளை ஃபுல் லெந்த் டெலிவரியில் வீசியிருந்தார் நடராஜன். மிகவும் கண்ட்ரோலாக பந்து வீசி அசத்தியிருந்தார்.

அவரது வெற்றி கதை…

சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னப்பம்பட்டி தான் நடராஜனின் சொந்த ஊர். தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் கரம்பாக கிடக்கும் வயல்வெளி பகுதியில் இளைஞர்கள் ஒன்று கூடி கிரிக்கெட் விளையாடுவார்கள். நடராஜன் அந்த இளைஞர்களில் ஒருவர்.

சின்ன வயசுல டிவி பெட்டியில கிரிக்கெட் பார்த்து ஏற்பட்ட ஆர்வத்துனால கிரிக்கெட் விளையாட ஆரம்பிச்சேன். ஊர்ல இருக்குற பசங்க கூட சேந்து ரப்பர் பால், டென்னிஸ் பால்னு வயல்வெளியில விளையாடிகிட்டு இருந்தேன். ஸ்கூல் முடிச்ச கையோட சேலத்துல இருந்த காலேஜ்ல டிகிரி படிக்க சேந்துட்டேன். காலேஜ்ல கிளாஸுக்கு போன நேரத்த காட்டியும் கிரவுண்ட்ல இருந்த நேரம் தான் அதிகம். 

காலேஜ் முடிச்சதும் என் கூட விளையாடிகிட்டு இருந்தவங்க எல்லாம் அடுத்த படிக்கு முன்னேறிட்டாங்க. நான் கிரிக்கெட்ட மட்டுமே உயிர்மூச்சா நினைச்சு வாழ்ந்து வந்தேன். அந்த சமயத்துல தான் எங்க கிராமத்த சேர்ந்த ஜெயபிரகாஷ் அண்ணா எனக்கு நம்பிக்கை கொடுத்து சென்னையில இருக்குற கிரிக்கெட் கிளப்புல என்ன விளையாட சொன்னாங்க. நானும் கிரிக்கெட் தான் கெரியர்னு முடிவு பண்ணிட்டதால சென்னைக்கு கிளம்பிட்டேன். கிளப் மேட்சுல சிறப்பா செயல்பட்டதுனால டிவிஷ்னல் மேட்சுக்கு தேர்வானேன். கொஞ்ச நாள்ல மாநில அணிக்காகவும், ரஞ்சி கிரிக்கெட்லயும் விளையாட வாய்ப்பு வந்துது. அப்படியே டிஎன்பிஎல் விளையாடியதனால ஐபிஎல் விளையாட வாய்ப்பு வந்தது” என்கிறார் நடராஜன்.

“அவனோட கேம் மேல கவனம் செலுத்தி கடினமா டிரெயின் செய்தேன். இன்னைக்கு அதுக்கான ரிசல்ட அறுவடை செய்துகிட்டு இருக்கான். துல்லியமா யார்க்கர் வீசுறதுக்காக பயிற்சி செய்தப்போ நிறைய முறை காயமும் பட்டிருக்கான். அந்த வலிய தாங்கி விளையாடின அவன் மாநில கிரிக்கெட்ல அசத்துனான். இப்போ ஐபிஎல் தொடர்ல சன்ரைசர்ஸ் அணிக்காக கலக்குறான். 

2017 வாக்குல அவனுக்கு கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாட வாய்ப்பு வந்துச்சு. அதுக்கு பிறகு 2018ல ஐதாராபாத் அணி ஏலத்துல எடுத்துச்சு. 

இந்த கிரிக்கெட் மூலமா அவர் குடும்பத்த செட்டில் பண்ணினது மட்டுமில்லாம அவன மாதிரியே எங்க ஊர்ல கிரிக்கெட்ட உயிர் மூச்சா சுவாசிக்கிற பல பசங்களுக்காக இங்கேயே ஒரு கிரிக்கெட் அகாடமியையும் உருவாக்கி இருக்கேன்” என்கிறார் நடராஜனின் வழிகாட்டியான ஜெயபிரகாஷ். 

நடராஜனின் பெற்றோர்கள் இருவருமே தினக்கூலி தொழிலாளிகள். கிரிக்கெட் விளையாட்டில் கிடைத்த சம்பாத்தியத்தின் மூலம் சொந்தமாக கான்க்ரீட் வீடு கட்டியுள்ளார்.  அதோடு தனது கிராமத்தில் கிரிக்கெட் கனவோடு இருக்கின்ற இளைஞர்களுக்கு முறையான பயிற்சியும், வாழிகாட்டுதலும் கிடைக்கின்ற வகையில் கிரிக்கெட் அகாடமி ஒன்றையும் அவர் கடந்த 2017இல் நிறுவியுள்ளார். 

“இப்போது எல்லோரும் டிவியில் பார்க்கின்ற அவரது பவுலிங் திறனை  நேரில் பார்த்தது மட்டுமின்றி விளையாடிய  அனுபவங்களும் எனக்கு உண்டு. துல்லியமாக பந்து வீசுவது நடராஜனின் நேச்சுரல் கேம். டென்னிஸ் பால் கிரிக்கெட்டில் விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளதால்  சிறப்பாக யார்க்கர் வீசி எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு இம்சை கொடுக்கிறார். டிஎன்பிஎல் மற்றும் தமிழ்நாடு அணிக்காக இது போல அபாரமாக அவர் பந்து வீசியுள்ளார்.

கிரிக்கெட் மீது நடராஜன் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு தான் கிராமத்து இளைஞர்களின் கிரிக்கெட் கனவுக்காக அவர் அமைத்துள்ள கிரிக்கெட் அகாடமி” என்கிறார் கிரிக்கெட் வீரர் அபினவ் முகுந்த்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com