ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடிய அம்பத்தி ராயுடு இந்திய அணியில் ஓரங்கட்டப்பட்டதில் இருந்து, இன்னும் சூடு பிடித்திருக்கிறது, ’யோ யோ’ சர்ச்சை!
‘வருடம் முழுவதும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ஒரு வீரரை, அரை மணி நேர டெஸ்ட் வைத்து ஓரங்கட்டுவது நியாயமா?’ என்று கேள்வி எழுப்பினார், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் பயிற்சியாளருமான சந்தீப் பாட்டீல்.
ஐதராபாத் கிரிக்கெட் சங்கச் செயலர் ஷ்ரேயாஸ் நாராயண், ’இந்த யோ-யோ விவகாரம் ஒருதலைப்பட்சமாக இருக்கிறது. ஐபிஎல்-லில் அதிக ரன்களை எடுத்த வீரரை, திடீரென உடற்தகுதி பெறவில்லை என்று நிராகரிப்பது சரியானதுதானா?’ என்று கேட்டிருக்கிறார்.
’யோ -யோ’வில் இந்திய வீரர்கள் தேர்வாக 16.1 என மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. வெளிநாடுகளில் இருந்த இந்த முறையை இந்தியாவுக்குக் கொண்டு வந்தவர், அனில் கும்ப்ளே. அவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டதும் கொண்டு வந்த விஷயம் இது.
இந்த முறை மற்ற நாடுகளில் எப்படி இருக்கிறது?
இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து வீரர்களுக்கு குறைந்தப் பட்சம் 19 மதிப்பெண். தென்னாப்பிரிக்கா வீரர்களுக்கு 18.5 மதிப்பெண்கள். இலங்கை மற்றும் பாகிஸ்தான் வீரர்களுக்கு 17.4. இதை அந்தந்த நாட்டு கிரிக்கெட் பயிற்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்க அணியின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, ‘அதை வெளியில் சொல்ல முடியாது. ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொருவிதமான மதிப்பெண்கள் இருக் கிறது. ஆனால், அது 16 மதிப்பெண்களுக்கு மேல்தான்’ என்றார். ஆனால், அவர்கள் 18.5 மதிப்பெண்களை நிர்ணயித்திருப்பது தெரிய வந்துள் ளது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, வீரர்களுக்கு குறைந்தபட்ச மதிப்பெண்ணாக 19 -ஐ நிர்ணயித்திருந்தது. ஆனால், நான்கு வருடத்துக்கு முன்பே ’யோ - யோ’வைத் தூக்கிவிட்டது அந்த அணி. இப்போது வேறு மாதிரியான பயிற்சிகளை வழங்குகிறது.