“ஆமாம்; டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருக்கிறது.. ஆனால்..” - விக்ரம் ரத்தோர்
டெல்லி காற்று மாசு குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சில விளக்கங்களை அளித்துள்ளார்.
டெல்லியில், காற்று மாசு மோசமான நிலையில் இருப்பதால், இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே, ஞாயிற்றுக் கிழமை நடக்க இருக்கும் டி-20 போட்டியை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பி.யுமான கவுதம் காம்பீர், கூறும்போது, ‘டெல்லியில் கிரிக்கெட் போட்டியைவிட காற்று மாசுதான் தீவிர பிரச்னையாக இருக்கிறது. டெல்லியில் வசிப்பவர்கள் விளையாட்டை விட, இதைத் தான் முக்கியமானதாக எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று கூறியிருந்தார்.
இதுபற்றி பிசிசிஐ தலைவர் கங்குலியிடம் கேட்டபோது, ‘திட்டமிட்டபடி, போட்டி டெல்லியில் நடக்கும்’ என்றார்.
ஆனாலும் இது குறித்த சந்தேகம் பரவலாக இருந்து வருகிறது. முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஒருவர், “என் வாழ்நாள் முழுக்கவே நான் வடமாநிலத்தில்தான் பயிற்சி எடுத்து இருக்கிறேன். இங்கு காற்றின் மாசு அதிமாகதான் உள்ளது. ஆனாலும் ஆட்டம் நடப்பதற்கான எல்லா விஷயங்களும் திட்டமிடப்பட்டு விட்டது. ஆகவே விளையாட்டு நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே இந்தப் பிரச்னை குறித்து இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், “ஆமாம் . இங்கே காற்று மாசு அதிகமாகவே நிலவுகிறது. ஆனாலும் நாங்கள் விளையாட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.