பூனம், மிதாலி ராஜ் ஆட்டம் வீண்… ஆஸி. அணி வெற்றி
மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரையிறுதிக்கு முதல் அணியாகத் தகுதி பெற்றது.
பிரிஸ்டோலில் நடந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்தது. பூனம் ராவத் மற்றும் கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தின் உதவியால் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 226 ரன்கள் எடுத்தது. பூனம் ராவத் 106 ரன்களும், மிதாலிராஜ் 69 ரன்களும் குவித்தனர். 227 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான போல்டன் மற்றும் மூனி ஆகியோர் சிறப்பான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் போல்டன் 36 ரன்களில் பூனம் யாதவின் பந்துவீச்சில் வெளியேறினார். அவரைத் தொடர்ந்து 45 ரன்கள் சேர்த்த நிலையில் மூனியும் ரன் அவுட் ஆகி வெளியேறினார். இதையடுத்து மூன்றாவது விக்கெட்டுக்குக் கைகோர்த்த எல்சிபெர்ரி மற்றும் லேனிங் ஆகியோர் ஆஸ்திரேலியாவின் வெற்றியை எளிதாக்கினர். இந்த ஜோடியின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய அணி 45.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்திய ஆஸ்திரேலிய அணி நடப்பு மகளிர் உலகக்கோப்பை தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது.