உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவுக்கான இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி இருக்கிறது?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவுக்கான இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி இருக்கிறது?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்தியாவுக்கான இறுதிச்சுற்று வாய்ப்பு எப்படி இருக்கிறது?

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் ஆஸ்திரேலிய அணி, கிரிக்கெட் தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகிறது. தற்போது இவ்விரு அணிகளுக்கு இடையில் பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் டிராஃபி நடைபெற்று வருகிறது. 4 போட்டிகள் கொண்ட இந்த தொடரில், முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணியும், 3வது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றுள்ளன. 4வது போட்டி வரும் மார்ச் 9ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற இருக்கிறது.

இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் பங்கேற்கும் அணிகளை தேர்வு செய்வதாக உள்ளது. முக்கியமாக, இந்த தொடர் இந்தியாவுக்கு வாழ்வா, சாவா என்கிற நிலையில் உள்ளது. ஏற்கெனவே இந்த தொடரில் 2 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், இறுதிச்சுற்றில் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவுதான்.

அதேநேரத்தில், இந்த தொடரின் 3வது போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதையடுத்து, அது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் மோதுவதற்கான முதலிடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தாலும், அதற்கடுத்த இடத்தில் இலங்கை அணி உள்ளது. தவிர, இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கான டெஸ்ட் தொடர் இன்னும் முடியவில்லை. இதனாலேயே இந்திய அணிக்கு பிரச்சினை உருவாகி உள்ளது.

இதுபோக, 4வது போட்டியிலும் கட்டாயம் வெற்றிபெற வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. இந்தப் போட்டியில் இந்தியா வெற்றிபெற்று விட்டால் எந்த சிக்கலுமின்றி, இறுதிச்சுற்றுக்கான பட்டியலில் 2வது இடத்தில் நுழைந்துவிடும். இல்லையேல், மற்ற அணிகளின் (இலங்கை - தென்னாப்பிரிக்கா) வெற்றி தோல்விகளைப் பொருத்தே இந்திய அணியின் இறுதிச்சுற்று வாய்ப்பு பரிசீலிக்கப்படும்.

இறுதிச்சுற்றில் இந்தியாவுக்கான வாய்ப்பு எப்படி?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றுவிட்டால், எந்த பிரச்சினையுமின்றி, சுலபமாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துவிடும். காரணம், 3-1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் அடிப்படையில் இலங்கை அணியை விட புள்ளிப் பட்டியலில் முன்னேறி விடும். இதனால் இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிவு இந்திய அணியை எந்த விதத்திலும் பாதிக்காது.

அதேநேரத்தில் 4வது டெஸ்ட் போட்டி, டிராவில் முடிந்து நியூசிலாந்திற்கு எதிரான தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தால், இந்திய அணி புள்ளிப் பட்டியலில் (3வது இடம்) இருந்து கீழிறங்க வாய்ப்புள்ளது. ஆக, போட்டியை டிரா செய்வதை விட, வெற்றி பெறுவதிலேயே இந்திய அணி கவனம் செலுத்த வேண்டும். ஒருவேளை நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இலங்கை அணி இரண்டுக்கும் குறைவான வெற்றியை பெற்றால் அதனால் இறுதிச் சுற்றின் 2வது இடத்துக்கு முன்னேற முடியாது.

அதாவது 1-1 அல்லது 1-0 என்ற கணக்கிலோ இலங்கை அணி வெற்றி பெற்றால், அது இந்தியாவுக்குச் சாதகமான சூழ்நிலையையே உருவாக்கும். கடந்த மார்ச் 1ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வியுற்றதனாலேயே இந்த சிக்கல் எழுந்துள்ளது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com