மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் சிங் தாக்கூர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் கோரிக்கைகளை ஏற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து, டெல்லி ஜந்தர் மந்தரில் மூன்று நாளாக நடைபெற்று வந்தப் போராட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது.
பாஜகவை சேர்ந்த உத்தரப்பிரதேச மக்களவை எம்.பி.யான பிரிஜ் பூஷன் சரண் சிங், இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவராக கடந்த 2011-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறார். இவர், டோக்கியோ ஒலிம்பிக்கில் தோல்வியடைந்த மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை கடுமையாக தொந்தரவு செய்ததாகவும், இதனால், அவர் தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறி, உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இவருக்கு ஆதரவும் தெரிவிக்கும் வகையில், இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகளான பஜ்ரங் புனியா, சாக்ஷி மாலிக், தீபக் பூனியா, ரவி தஹியா உள்ளிட்ட 30 பேர் போராட்டத்தில் கலந்துகொண்டனர். மேலும், பிரிஜ் பூஷன் சரண் சிங் மட்டுமின்றி பயிற்சியாளர்களும் வீராங்கனைகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக இந்தப் போராட்டத்தின்போது புகார் தெரிவிக்கப்பட்டது.
லக்னோவில் உள்ள தேசிய முகாமிலும் பெண் வீராங்கனைகளிடம் அத்துமீறல் நடப்பதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த சம்பவம் நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்திய மல்யுத்த கூட்டமைப்பை உடனடியாக கலைத்து விட்டு, புதிய நிர்வாகத்தை உருவாக்க வேண்டியும், தலைவர் பதவியை பிரஜ் பூஷன் சரண் சிங் ராஜினாமா செய்ய கோரியும், மல்யுத்த வீரர்களின் இந்தப் போராட்டமானது தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்தது.
அதேநேரம் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் ஷரண் சிங், தன் மீதான குற்றச்சாட்டுகளைத் திட்டவட்டமாக மறுத்திருந்தார். இந்தப் பொய்யான புகார்களுக்காகப் பதவி விலக முடியாது என்று தெரிவித்த அவர், தான் வாயைத் திறந்தால் இங்கு மிகப் பெரிய சுனாமியே வரும் என்றும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகளிடம் முதல் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினார்.
அது தோல்வியில் முடிந்த நிலையில், மீண்டும் நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமார் 7 மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்நிலையில், சுமூகமாக நள்ளிரவு பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்தை திரும்பப் பெறுவதாக அறிவித்தனர். பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் ஷரண் சிங் மீதான புகார் குறித்து விசாரிக்க 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவில் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்
தலைமையிலான குழுவில், டோலா பேனர்ஜி, மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், சஹ்தேவ் யாதவ், அலாக்நந்தா அசோக், இரண்டு வழக்கறிஞர்கள் இடம்
பெற்றுள்ளனர்.
இந்தக் குழு விரிவாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்க செய்ய உள்ளது. விசாரணை முடிவடையும் வரை, இந்திய மல்யுத்த கூட்டமைப்பில் இருந்து நான்கு வாரங்களுக்கு அவர் விலகுவார் என்று மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதற்கு நன்றி தெரிவித்த அவர், மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் போராட்டத்தின் ஒவ்வொரு நிலையிலும் அரசு நிச்சயம் அவர்களுடன் துணை நிற்கும் என்றும் கூறினார்.
இதுகுறித்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற பஜ்ரங் புனியா கூறுகையில், “எங்களது கோரிக்கைகளை கேட்டறிந்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், உரிய விசாரணை நடத்தப்படும் என உறுதியளித்து உள்ளார். குற்றம்சாட்டப்பட்டவர் மீது முறையான விசாரணை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்துள்ளார். அவருக்கு நன்றி தெரிவித்து நியாயமான விசாரணை நடைபெறும் என நம்புகிறோம், எனவே போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து 3 நாட்களாக நடைபெற்று வந்த போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது.