உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: ’Ageas Bowl’ மைதானத்தில் அப்படியென்ன சிறப்பு?- ஒரு பார்வை

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: ’Ageas Bowl’ மைதானத்தில் அப்படியென்ன சிறப்பு?- ஒரு பார்வை
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல்: ’Ageas Bowl’ மைதானத்தில் அப்படியென்ன சிறப்பு?- ஒரு பார்வை

வரும் 18ஆம் தேதி அன்று கிரிக்கெட் உலகின் மிக முக்கிய போட்டியாக கருதப்படும் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி இங்கிலாந்து நாட்டில் உள்ள Ageas Bowl மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் அங்குள்ள சவுத்தாம்ப்டன் நகரில் அமைந்துள்ளது. இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து 133 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இங்குதான் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் இறுதி போட்டியில் மோதி விளையாட உள்ளன. 

லார்ட்ஸ் இருக்க Ageas Bowl ஏன்?

கிரிக்கெட் விளையாட்டின் தாய்நாடான இங்கிலாந்து நாட்டின் செயின்ட் ஜான் வுட்ஸ் பகுதியில் அமைந்துள்ளது லார்ட்ஸ் மைதானம். ‘தி ஹோம் ஆப் கிரிக்கெட்’ என இந்த மைதானத்தை அழைப்பது உண்டு. இந்த புகழ்பெற்ற மைதானத்தில் 1844 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் விளையாடப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தில்தான் முதலில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இருப்பினும் கொரோனா தொற்று காரணமாக போட்டியை பயோ செக்யூர் பபூளில் நடத்த வேண்டிய அவசியம் உள்ளதால் இறுதி போட்டி ஏஜூஸ் பவுல் (Ageas Bowl) மைதானத்திற்கு மாற்றப்பட்டது. 

Ageas Bowl மைதானத்தின் சிறப்பம்சம்!

வழக்கமாக விளையாட்டு மைதானம் என்றால் வீரர்கள் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான சகலவிதமான உள்கட்டமைப்பு ஏற்பாடுகளும் அங்கு அமைந்திருக்கும். சர்வதேச போட்டிகளை ஒருங்கிணைக்கும் மைதானம் என்றால் இந்த ஏற்பாடுகள் உலக தரத்தில் இருக்கும். இது கிரிக்கெட் உட்பட அனைத்தும் விளையாட்டுக்கும் பொருந்தும். அதே போல மைதானமும் கச்சிதமாக பராமரிக்கப்படும். இது அனைத்தும் Ageas Bowl மைதானத்தில் உள்ளது. அதோடு இந்த மைதானத்தினுள் நட்சத்திர விடுதி ஒன்றும் அமைந்துள்ளது. அதனால் பயோ பபூளில் உள்ள வீரர்கள் மைதானத்தை விட்டு வேறு எங்கும் வெளியில் செல்ல வேண்டிய அவசியமில்லை. வீரர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு நூறு சதவிகிதம் இந்த மைதானம் உத்தரவாதம் அளிக்கிறது. அதனால்தான் இறுதி போட்டி இங்கு நடைபெறுகிறது. 

1987இல் இங்கிலாந்தின் முதல் தர கிரிக்கெட் அணிகளில் ஒன்றாக உள்ள ஹாம்ப்ஷயர் கிரிக்கெட் அணிக்கு பிரத்யேகமாக ஒரு கிரிக்கெட் மைதானத்தை உருவாக்கும் நோக்கில் யோசித்த போது உதயமானது தான் இந்த மைதானம். அதன்படி பிரிட்டிஷ் கட்டிட வடிவமைப்பாளர் ‘சர் மைக்கேல் ஹாப்கின்ஸ்’ இந்த மைதானத்தை வடிவமைத்தார். 1997இல் மைதானத்தை கட்டி எழுப்பும் பணி தொடங்கியது. நிதி சிக்கல் பிரச்சனைகளை சமாளித்து ஒருவழியாக கடந்த 2000மாவது ஆண்டில் இறுதி வடிவம் பெற்றுள்ளது. பார்வைக் கூடம் அதற்கு பிறகு கட்டி முடிக்கப்பட்டுள்ளது.  

2001 முதல் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் நடக்க தொடங்கி உள்ளன. அந்த ஆண்டின் நவம்பரில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி உள்ளன. தொடர்ந்து சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கான அங்கீகாரத்தை அளித்தது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம். 

15000 பார்வையாளர்கள் அமர்ந்து பார்ப்பதற்கான வசதி இந்த மைதானத்தில் உள்ளது. மைதானா வளாகத்திற்குள் கால்ப் கோர்ஸ், சிறிய அளவிலான மைதானமும் ஒன்று. 

வடக்கு பகுதியில் மைதானத்தை பார்த்தபடி 175 அறைகள் கொண்ட மூன்றடுக்கு மாடி கொண்ட நட்சத்திர விடுதி அமைந்துள்ளது. போட்டிகள் நடைபெறும் காலத்தில் 20 அறைகள் பார்வையாளர்களுக்கு வாடகை விடப்படுவது வழக்கம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த விடுதி பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. சர்வதேச அளவில் பிரபலமான ஹில்டன் நிறுவனம் இந்த விடுதியை நிர்வகித்து வருகிறது. 

சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் 

கடந்த 2003 முதல் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் இங்கு நடைபெற்று வருகிறது. 8 டி20, 6 டெஸ்ட் மற்றும் 31 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளும் இந்த மைதானத்தில் நடைபெற்று உள்ளது. சாம்பியன்ஸ் டிராபி, உலக கோப்பை மாதிரியான ஐசிசி தொடர்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றுள்ளது. இந்தியா இந்த மைதானத்தில் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வென்றுள்ளது. முறையே கென்யா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிராக இந்த வெற்றி பதிவாகி உள்ளது. இந்தியா இந்த மைதானத்தில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளது. அந்த இரண்டு போட்டியிலும் இங்கிலாந்திடம் வீழ்ந்துள்ளது இந்தியா. கடைசியாக 2018இல் இந்தியா இந்த மைதானத்தில் விளையாடி உள்ளது. பூஜாரா 2018 டெஸ்ட் போட்டியில் சதம் பதிவு செய்துள்ளார். அவரை தவிர பாகிஸ்தானின் அசார் அலி மற்றும் இலங்கையின் சங்கக்காரா இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் பதிவு செய்த ஆசிய வீரர்களாக உள்ளனர். 

583 ரன்கள் இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச ரன்களாகும். இங்கிலாந்து அந்த சாதனையை படைத்துள்ளது. 178 ரன்கள் இந்த மைதானத்தில் ஒரு இன்னிங்ஸில் பதிவு செய்யப்பட்டுள்ள குறைந்தபட்ச ரன்களாகும். இந்தியா கடந்த 2014இல் இந்த மோசமான சாதனையை படைத்துள்ளது. ஒரு போட்டியில் அதிகபட்சம் விக்கெட் வீழ்த்திய வீரராக மொயின் அலி உள்ளார். 2018இல் இந்தியாவுக்கு எதிராக 9 விக்கெட்டுகளை அவர் வீழ்த்தி இருந்தார். ஒருநாள் போட்டியில் வங்கதேசத்தின் ஷகிப்-அல்-ஹசன் 5 விக்கெட்டுகளை ஒரு போட்டியில் வீழ்த்தி உள்ளார். இது இந்திய அணியில் உள்ள சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகம். ஆறு டெஸ்ட் போட்டிகளில் மூன்று சமனில் முடிந்துள்ளது. இந்த மைதானத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி கடந்த ஆண்டு 200 ரன்களை சேஸ் செய்தது அதிகபட்ச சேஸிங் ரன்களாக உள்ளது. இந்தியா கடந்த 2018இல் 245 ரன்களை சேஸ் செய்த போது 184 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவி உள்ளது. அந்த போட்டியில் கோலி மற்றும் ரஹானே அரைசதம் பதிவு செய்து இருந்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் மொயின் அலியை தவிர ஒரே இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்திய அனைவரும் வேகப்பந்து வீச்சாளர்கள். 

இதையெல்லாம் கணக்கில் கொண்டு இந்தியா இந்த இறுதி போட்டியில் விளையாட வேண்டி உள்ளது. முன்பு ரோஸ் பவுல் என்று அழைக்கப்பட்ட இந்த மைதானம் இப்போது ஸ்பான்சர்ஷிப் காரணமாக Ageas Bowl என அழைக்கப்படுகிறது. 

- எல்லுச்சாமி கார்த்திக்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com