திண்டுக்கல்: ஆர்வமுடன் சிலம்பக் கலையை கற்கும் இளைஞர்கள்

திண்டுக்கல்: ஆர்வமுடன் சிலம்பக் கலையை கற்கும் இளைஞர்கள்
திண்டுக்கல்: ஆர்வமுடன் சிலம்பக் கலையை கற்கும் இளைஞர்கள்
ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 14-ம் தேதி (இன்று), உலக பாரம்பரிய தற்காப்புக் கலை தினம் கொண்டாடப்படுகிறது.
'கல் தோன்றி மண் தோன்றா காலத்தே மூத்த குடி தமிழ் குடி' என்ற சான்றோர் வாக்கின்படி தமிழர்களின் தற்காப்பு கலையான சிலம்பம் கலைதான் உலகெங்கும் உள்ள தற்காப்புக் கலைகளில் முன்னோடியாக உள்ளது. நம் முன்னோர்கள் 18 வகையான சிலம்பக் கலையில் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
தற்போது இந்தப் பாரம்பரிய தற்காப்பு கலையை பாதுகாக்கும் விதம் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் வேலன் வாழும் கலைக்கூடம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு சிலம்பக்கலை கற்றுத்தரப்படுகிறது. 
தற்போதைய காலக்கட்டத்திற்கு ஏற்ப மூன்று முக்கிய சிலம்பக்கலைகள் மாணவர்களுக்கு சொல்லித் தரப்படுகின்றன. கை சிலம்பம், அலங்காரச் சிலம்பம்,  போர் சிலம்பம் ஆகிய சிலம்பக் கலைகள் கற்றுத் தரப்படுகின்றன. நாள்தோறும் அதிகாலை பயிற்சிக்கு வரும் சிலம்ப வீரர்-வீராங்கனைகள் ஆர்வத்தோடு சிலம்பக் கலையை பயின்று வருகின்றனர். 
தைரியம், தன்னம்பிக்கை, உடல்வலிமை ஆகியவை ஒருசேர சிலம்பக்கலையில் கிடைப்பதால் கிராமப்புறங்களில் மட்டும் அல்லாமல் நகரப் புறங்களிலும் உள்ள  பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளை ஆர்வத்துடன் சிலம்பம் கற்றுக்கொள்ள அனுப்பி வைக்கின்றனர்.
3 வயது முதல் 15 வயது வரையிலான மாணவர்கள் மட்டுமல்லாது இளைஞர்களும் சிலம்பக் கலையை கற்றுக்கொள்ள தற்போது ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக பெண்கள் அதிகளவு தற்காப்பு கலையை கற்க ஆர்வத்துடன் வருகின்றனர்.
இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு பணியில் சிலம்ப வீரர்களுக்கு முக்கியத்துவமும் முன்னுரிமையும் அளித்திருப்பது சிலம்பம் விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் போட்டிகளில் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிக்காட்ட சிலம்பாட்ட  வீரர்கள் தயாராகி வருகின்றனர். தமிழர்களின் பாரம்பரிய கலையை பாதுகாக்க தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டத்திற்கு சிலம்பம் கலை ஆசான்கள் மற்றும் மாணவர்கள் நன்றியை தெரிவித்துள்ளனர்.
- எம்.வீரமணிகண்டன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com