கத்தார் கால்பந்து திருவிழா: மாஸ் காட்டிய மெஸ்ஸி... உலகக்கோப்பை தொடரில் நிகழ்த்திய சாதனை!

கத்தார் கால்பந்து திருவிழா: மாஸ் காட்டிய மெஸ்ஸி... உலகக்கோப்பை தொடரில் நிகழ்த்திய சாதனை!
கத்தார் கால்பந்து திருவிழா: மாஸ் காட்டிய மெஸ்ஸி... உலகக்கோப்பை தொடரில் நிகழ்த்திய சாதனை!

கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா அணி, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இறுதி கட்டத்தை எட்டியுள்ள கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரின் முதல் அரையிறுதிப் போட்டி டிச.14 அதிகாலை 12.30 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த போட்டியில், மெஸ்ஸி தலைமையிலான நட்சத்திர படையுடன் (அர்ஜென்டினா) 2018 உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் இரண்டாமிடம் பெற்ற குரேஷியா பலப்பரீட்சை நடத்தியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியின் முதல்பாதி ஆட்டத்தின் 33-வது நிமிடத்தில், அர்ஜென்டினா அணிக்கு கிடைத்த பெனல்டி வாய்ப்பை கோலாக மாற்றிய மெஸ்ஸி, தனது அணியை முன்னிலை படுத்தியதோடு இந்த உலகக் கோப்பை நாக்-அவுட் சுற்றுப்போட்டி அனைத்திலும் கோல் அடித்து சாதனை படைத்தார். தொடர்ந்து 38-வது நிமிடத்தில் அர்ஜென்டினா அணி வீரர் ஜூலியன் ஆல்வரெஜ் ஒரு கோல் அடிக்க, ஆட்டத்தில் முதல் பாதியில் அர்ஜென்டினா 2:0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

உலக கால்பந்து ரசிகர்களின் கண்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இந்த போட்டியின் இரண்டாவது பாதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. அந்தவகையில் இரண்டாவது பாதி ஆட்டத்தின் 68-வது நிமிடத்தில் அர்ஜென்டினா வீரர் ஜூலியன் ஆல்வரெஜ் மேலும் ஒருகோல் அடித்து தனது அணியின் வெற்றியை உறுதி செய்தார். இறுதிவரை கடுமையாக போராடியும் குரேஷியா அணியால் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் 3:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்ற அர்ஜென்டினா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த போட்டியில் பெனல்டி முறையில் கோல் அடித்துள்ள மெஸ்ஸி கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் தனது 5-வது கோலை பதிவு செய்தார். மிகவும் சிறப்பாக விளையாண்ட மெஸ்ஸி, பெனல்டி மூலம் ஒருகோல் அடித்ததோடு மேலும் இரண்டு கோல்கள் அடிக்க காரணமாகவும் இருந்தார். இந்த போட்டியில் வெற்றிபெற்றுள்ள அர்ஜென்டினா 1990 ஆம் ஆண்டு இத்தாலியில் நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியை நினைவுபடுத்தியதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், டிச 15 அதிகாலை 12.30 மணியளவில் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முதன்முதலாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com