உலகக் கோப்பையை எந்த அணி வெல்லும்? அக்தர் கணிப்பு!
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.
உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மே 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இதில் லீக் சுற்று முடிந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரை யிறுதிப் போட்டியில் நியூசிலாந்துடன் மோதிய இந்திய அணியும், இரண்டாம் அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதிய ஆஸ்திரேலிய அணியும் தோல்வி அடைந்தன.
இதையடுத்து இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் முன்னேறின. இந்தப் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இன்று நடக்கிறது. உலக கோப்பை வரலாற்றில் இந்த இரு அணிகளும் இதுவரை கோப்பையை வென்ற தில்லை என்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் எந்த அணி கோப்பையை கைப்பற்றும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் கணித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ‘’இங்கிலாந்து அணி டாஸ் வென்றால், அதிக ரன்களை குவிக்கும். மார்டின் கப்திலும் ஹென்றி நிக்கோலஸும் நியூசிலாந்துக்கு சரியான அடித்தளம் அமைத்துக்கொடுக்க வேண்டும். அனைத்து வகையிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். நான் நியூசிலாந்து அணியை ஆதரிக்கிறேன். ஆனால், இங்கிலாந்து கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பிருக்கிறது.
இதுபோன்ற பெரிய போட்டிகளில் நெருக்கடி முக்கிய அங்கம் வகிக்கும். இங்கிலாந்து பெரிய அணியாக இருக்கிறது. அந்த அணி, லார்ட்ஸ் மைதானத்தில் வரலாற்று சாதனைப் படைக்கும் என்று நினைக்கிறேன். அந்த அணியில் பட்லரை கொஞ்சம் முன்னதாகவே களமிறக்க வேண்டும். வாய்ப்பு கிடைத்தால் அவர் அதிகமான ரன்களை குவிப்பார்’’ என்று தெரிவித்துள்ளார்.