“தோனி சொன்னதை அப்படியே செய்தேன்” - ஹாட்ரிக் பற்றி சமி

“தோனி சொன்னதை அப்படியே செய்தேன்” - ஹாட்ரிக் பற்றி சமி

“தோனி சொன்னதை அப்படியே செய்தேன்” - ஹாட்ரிக் பற்றி சமி
Published on

ஆப்கான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி ஹாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார்.

இந்தியா ஆப்கான் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று சவுதாம்ப்டன் நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது. பலம் வாய்ந்த இந்திய அணி ஆப்கான் அணியிடம் 50 ஓவர்கள் முழுமையாக விளையாடி வெறும் 224 ரன்கள் மட்டுமே எடுத்தது. 

முஜீப் ரஹ்மான், ரஷித் கான், நபி ஆகிய ஆப்கான் சுழற்பந்துவீச்சுகளில் இந்திய வீரர்கள் தடுமாறி விக்கெட்களை பறிகொடுத்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. கே.எல்.ராகுல், தோனி, கேதர் ஜாதவ், விஜய் சங்கர் எனப் பலரும் ஏராளமான பந்துகளை வீணாக்கினர். கேப்டன் விராட் கோலி மட்டும் பந்துகளை வீணடிக்காமல் 63 பந்துகளில் 67 ரன்கள் அடித்தார்.

225 ரன் என்ற இலக்குடன் ஆப்கான் அணி விளையாடியது. குறைவான ரன்கள் என்றாலும் பும்ரா, ஷமி, சாஹல், குல்தீப் ஆகிய பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணி வெற்றி பெறும் என நம்பப்பட்டது. ஆப்கான் அணி 100 ரன்களுக்கு இரண்டு விக்கெட் மட்டுமே இழந்து இருந்தது. 

இருப்பினும், நெய்ப் 27, ரஹ்மத் ஷா 36, ஷஹிடி 21 ரன்கள் எடுத்து இந்திய பந்துவீச்சாளர்களை சோதித்தனர். ஒருபுறம் விக்கெட் வீழ்ந்தாலும் நபி மட்டும் நிலைத்து நின்று ஆடினார். அவருக்கு ஜத்ரான் 21, ரஷித் கான் 14 ரன்கள் அடித்து ஒத்துழைப்பு அளித்தனர். அதனால், போட்டி மெல்ல மெல்ல ஆப்கான் அணிக்கு சார்பாக சென்றது. கடைசி நான்கு ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. களத்தில் நபி இருக்கிறார். பும்ரா வீசிய 47வது ஓவரில் நபி ஒரு சிக்ஸர் பறக்கவிட்டார்.

அதனால், இந்திய ரசிகர்கள் கொஞ்சம் பதட்டம் அடைந்தனர். ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. மூன்று ஓவர்களுக்கு 24 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலை. 46 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து நபி களத்தில் இருக்கிறார். மூன்று விக்கெட் இன்னும் கைவசம் உள்ளது. இருப்பினும், சமி வீசிய 48வது ஓவரில் 3, பும்ரா வீசிய 49வது ஓவரில் 5 ரன்கள் மட்டுமே எடுக்கப்பட்டதால் இந்திய ரசிகர்களுக்கு நம்பிக்கை வந்தது. 

இறுதி ஓவரில் 6 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டும். அந்த ஓவரை சமி வீசினார். முதல் பந்திலே பவுண்டரி விளாசி மிரட்டினார் நபி. அப்போது அவர் அரைசதம் கடந்துவிட்டார். இன்னும் 5 பந்துகளில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டியிருந்தது. இரண்டாவது பந்தை அடித்த நபி ரன் ஓடவில்லை. மூன்றாவது பந்தினை தூக்கி அடித்தார் நபி. அதனை அழகாக கேட்ச் பிடித்தார் ஹர்திக் பாண்ட்யா. அடுத்த இரண்டு பந்துகளில் ஆலம் மற்றும் முஜிப் உர் ரஹ்மான் இருவரையும் கிளீன் போல்ட் ஆக்கினார் சமி. இதன் மூலம் உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார் சமி. இந்திய அணி பரபரப்பான ஆட்டத்தில் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டிக்கு பின்னர் பேசி சமியிடம் ஹாட்ரிக் விக்கெட் குறித்து கேட்கப்பட்டது,, “என்னுடைய திட்டம் ஒன்றுதான். யார்க்கர் வீச வேண்டும். தோனியும் அதனைதான் என்னிடம் அறிவுறுத்தினார். ‘பந்துவீச்சில் எந்த மாற்றமும் செய்துவிட வேண்டாம். ஹாட்ரிக் எடுப்பதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. இது மிகவும் அரிதான வாய்ப்பு. ஒரே மாதிரி பந்துவீசுங்கள்’என்றார். அவர் சொன்னதை அப்படியே செய்தேன்” என்று கூறினார். 

இந்தப் போட்டியில் தோனி மிகவும் மந்தமாக விளையாடி 50 பந்துகளுக்கு மேல் சந்தித்து 28 ரன்கள் மட்டுமே எடுத்தார். அவர் மீது ரசிகர்கள் கடுமையான விமர்சனங்கள் எழுந்தது. இருப்பினும், கீப்பிங் பணியில் சிறப்பாக செயல்பட்டார் தோனி. அதோடு, கடைசியில் இக்கட்டான நேரத்தில் சமிக்கு அவர் கொடுத்த யோசனையை அவரது ரசிகர்கள் கொண்டாடினர். சமூக வலைத்தளங்களிலும் இது வைரல் ஆனது.

அத்துடன், கடைசி ஓவரில் தோனி செய்த பீல்டிங் மாற்றமும் முக்கியமானது. முதல் பந்தில் நபி பவுண்டரி அடித்தார். அடுத்த பந்தில் நபி அடிக்க முற்பட்ட திசையில் ஹர்திக் பாண்ட்யாவை நிறுத்தி வைத்தார் தோனி. அதே இடத்தில் சரியாக நபி அடித்த பந்து வர பாண்ட்யா அழகாக கேட்ச் பிடித்தார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com