‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்

‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்
‘ஒரு குடையால் எல்லாமே மாறிப் போனது’ - புதினை வச்சு செய்த நெட்டிசன்கள்

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டி என்பதால் நேற்று மாஸ்கோ நகரமே களைகட்டியிருந்தது. அனல் பறக்க நடைபெற்ற இறுதிப் போட்டியில் பிரான்ஸ்-குரேஷியா அணிகள் பலப்பரீட்சை செய்தனர். கோல் மழை பொழிந்த பிரான்ஸ் 4-2 கணக்கில் குரேஷியாவை வீழ்த்தியது. போட்டி நடைபெறும் வரை வானிலையில் எவ்வித இடையூறும் இல்லாமல் சென்றது. ஆனால், போட்டி முடிந்த சில நிமிடங்களில் திடீரென மழை கொட்டியது. அப்போது, பரிசளிப்பு நிகழ்ச்சிக்காக எல்லோரும் காத்திருந்தார்கள். திடீரென மழை வரும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. 

பரிசளிப்பு நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் மற்றும் மற்ற நாடுகளின் தலைவர்கள் கூடியிருந்தார்கள். புதினுக்கு அருகில் ஒருபுறம் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரான், மற்றொரு புறம் கொலிண்டா கிராபர் கிடரோவிக் இருந்தனர். கொட்டும் மழையில் புதினுக்கு மட்டும் அவரது உதவியாளர் குடை பிடிக்க, மக்ரானும், கிடரோவிக்கும் மழையில் நனைந்தபடி நின்றனர். வீரர்கள் வரிசையாக வந்து பரிசுகளை பெற்றுச் சென்றனர். மற்றவர்களுக்கு குடை வருவதற்கு சிறிது நேரம் ஆக, அந்தச் சிறிது நேரத்தில் புதின் மட்டும் குடையில் நனையால் நிற்கும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

மாஸ்கோவில் ஒரு குடை மட்டும் தான் இருக்கா?

சமூக வலைத்தளங்களில் அதுவரை உலகக் கோப்பையில் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது குறித்தும், குரேஷியா அணி தோல்வியை தழுவியது குறித்தும் மட்டுமே நெட்டிசன்கள் பேசிக் கொண்டிருந்தனர். ஆனால், மற்ற நாட்டு தலைவர்கள் மழையில் நனைந்து கொண்டிருக்க புதின் மட்டும் குடையில் இருக்கும் படங்கள் மற்ற எல்லா பேச்சுக்கும் முற்றுப் புள்ளி வைத்துவிட்டது. அந்தப் படங்கள் வெளியானது முதல் புதினையை வைத்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர். அதிகாரம் மிக்க மனிதராக புதின் இருப்பதை இது காட்டுகிறது, மாஸ்கோவில் ஒரே ஒரு குடை தான் உள்ளதா? என பல கேள்விகளை எழுப்பி மீம்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் மின்னல் வேகத்தில் பறந்தன. 

ஒரு போட்டி தனது நாட்டில் நடக்கும் பட்சத்தில் வருகை தரும் விருந்தினர்களை தான் அதிகம் உபசரிக்க வேண்டும். ஆனால், புதினுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட அந்தக் குடை வசதி மற்ற தலைவர்களுக்கு இல்லாமல் போனது எப்படி என பலரும் கேள்வி மேல் கேட்டார்கள். நாட்டின் அதிபர், பிரதமர்களுக்கே இந்த நிலையா? என்றும் கேட்டார்கள். புதின் ஒரு சர்வாதிகாரி மட்டுமல்ல, விருந்தினர்களை உபசரிக்கத் தெரியாதவர் என்றும் கூறினார்கள் நெட்டிசன்கள்.

புதினோடு மட்டும் நிறுத்திக் கொண்டார்களா, ட்ரம்பும் குடையோடு இருக்கும் படம் ஒன்றினை போட்டு இருவரை ஒப்பிட்டு வேறு கமெண்ட்ஸ் செய்தார்கள். ட்ரம்ப் இருக்கும் அந்தப் படத்தில் அவர் மட்டும் குடை பிடித்து இருப்பார், அவருடன் உள்ள குடும்பத்தில் தனியாக குடையின்றி இருப்பார்கள். அப்பொழுது காற்று மட்டும்தான் வீசும்.

ட்ரம்பையும், புதினையும் ஒப்பிட்டு மீம்ஸ்கள் அதிக போட்டார்கள்.

ரஷ்யர்கள் சளைத்தவர்கள் அல்ல

ஒருபுறம் புதினை நெட்டிசன்கள் வைத்து ட்ரோல் செய்து வந்தனர். ஆனால், மறுபுறம் புதினுக்கு ஆதரவாக ட்ரோல் செய்தனர். மாஸ்கோவில் நாஜி படைகளின் தாக்குதலில் உயிரிழந்த வீரர்களுக்கு மரியாதை செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்ற போது மற்றவர்கள் குடையுடன் இருக்க, புதின் மட்டும் நனைந்து கொண்டே மரியாதை செய்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட படங்களை பதிவிட்டு இதுதான் புதின் என்று அவர்கள் பங்குக்கு முட்டுக் கொடுத்தார்கள். அதோடு மட்டுமல்லாமல், மழை வருவதை புதினின் உதவியாளர் சரியாக கணித்தார் என்றும் சிலர் கூறினார்கள். 

ஒரு மாதகாலமாக உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளை சிறப்பாக நடத்தி வந்த ரஷ்யா, கடைசி தருணத்தில் ஒரே ஒரு குடையால் தன்னுடைய பேருக்கு களங்கத்தை ஏற்படுத்திக் கொண்டது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com