உலக சாம்பியன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பதிலடி-பழைய பார்மிற்கு வந்த ஆஸ்திரேலியா!

உலக சாம்பியன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பதிலடி-பழைய பார்மிற்கு வந்த ஆஸ்திரேலியா!
உலக சாம்பியன் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து பதிலடி-பழைய பார்மிற்கு வந்த ஆஸ்திரேலியா!

டி20 தொடரில் 2-0 என்று தோற்கடித்த இங்கிலாந்து அணிக்கு, ஒருநாள் தொடரில் 3-0 என்று ஒயிட்வாஷ் செய்து பதிலடி கொடுத்துள்ளது ஆஸ்திரேலியா அணி.

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் பங்குபெற்று விளையாடியது இங்கிலாந்து அணி. 2022 டி20 உலக்கோப்பைக்கு முன்னர் நடந்த டி20 தொடரின் 2 போட்டிகளும் 200 ரன்கள், 178 ரன்கள் கொண்ட அதிரடியான போட்டியாக சென்றதில், நன்றாக ஃபைட் செய்திருந்தது ஆஸ்திரேலியா அணி. இருந்தபோதிலும் இரண்டு போட்டிகளிலும் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா தோல்வியே கண்டது.

2022 டி20 உலகக்கோப்பையை வென்றதிற்கு பிறகு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்குபெற்று விளையாடியது இங்கிலாந்து அணி.

அந்தவகையில் தொடரின் முதல் போட்டியில், என்ன தான் டேவிட் மலன் சதமடித்து 288 என்ற இலக்கை நிர்ணையித்தாலும், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய டாப் ஆர்டர்கள் டேவிட் வார்னர், டிரவிஸ் ஹெட் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் ஆட்டத்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் முடித்து வைத்தனர். பின்னர் நடந்த 2ஆவது போட்டியில், ஸ்டீவன் ஸ்மித்தின் 94 ரன்கள் இன்னிங்க்ஸால் 280 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலிய அணி, இரண்டாவதாக களமிறங்கிய இங்கிலாந்து அணியை 208 ரன்களில் சுருட்டி 72 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியை பதிவுசெய்தது.

இந்நிலையில் 3ஆவது மற்றும் கடைசிபோட்டி நேற்று நடைபெற்றது. 3ஆவது போட்டியை வென்று ஒயிட் வாஸ் ஆவதை இங்கிலாந்து அணி தடுத்து நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடங்கப்பட்ட ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் ஓபனர்கள் டேவிட் வார்னர் மற்றும் டிரவிஸ் ஹெட் இருவரும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சை சிக்சர்கள், பவுண்டரிகளாக என விளாச... முதல் விக்கெட்டையே எடுக்கமுடியாமல் திணறினர் இங்கிலாந்து அணியினர்.

தொடர்ந்து விக்கெட்டை விட்டுகொடுக்காமல் அதிரடி காட்டிய ஹெட் மற்றும் வார்னர் இருவரும் அடுத்தடுத்து சதமடித்து அசத்தினர். 16 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் விளாசிய டிரவிஸ் ஹெட் 150 அடித்து மிரட்ட, ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோர், விக்கெட்டே இல்லாமல் 250 ரன்களை கடந்தது. 269 ரன்கள் சேர்த்த இந்த கூட்டணியை ஒருவழியாக 38ஆவது ஓவரை வீசவந்த ஒல்லி ஸ்டோன், ஒரே ஓவரில் ஹெட் மற்றும் வார்னர் என அடுத்தடுத்து அவுட்டாக்கி உடைத்தார். 152 ரன்களில் ஹெட்டும், 106 ரன்களில் வார்னரும் வெளியேற முதல் இன்னிங்ஸ் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 355 ரன்கள் குவித்தது ஆஸ்திரேலிய அணி.

தொடர்ந்து 356 இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குபிடிக்க முடியாமல் அடுத்தடுத்து தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்தது. ஆடம் ஷாம்பா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்த, 31.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி 142 ரன்கள் மட்டுமே எடுத்தது. போட்டியை 221 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்து டி20 தொடருக்கு பழிக்குப்பழி வாங்கியது.

தொடர்ந்து தனது பழைய பார்மை இழந்து ஆடிவந்த ஆஸ்திரேலிய அணி அடுத்த வருடம் ஒருநாள் உலகக்கோப்பை நடைபெற உள்ள நிலையில், சரியான நேரத்தில் தனது பழைய பார்மிற்கு திரும்பியுள்ளது.

இங்கிலாந்தின் தோல்வி குறித்து பேசியிருக்கும் ஜாஸ் பட்லர், எந்த குழப்பமும் இல்லை, எப்போதுமே ஆஸ்திரேலியாவிற்கு எதிரான போட்டிகள் சவால் நிறைந்தது தான், தோல்வியடைந்திருந்தாலும் இந்த தொடரில் எங்கள் அணிக்கு தேவையானதை நாங்கள் பெற்றுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com