உலகக்கோப்பை கால்பந்தில் கிளைமேக்ஸ் காட்சி: கோப்பை யாருக்கு?
ஒரு மாத காலமாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடர் கிளைமேக்ஸ் காட்சியை நெருங்கியுள்ளது. இன்றிரவு நடைபெறும் இறுதிப்போட்டியில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது குரேஷியா.
1998-ல் சாம்பியன் பட்டம் வென்ற லீ ப்ளூஸ் என அழைக்கப்படும் பிரான்ஸ் அணி ஒரு முனையில்... முதன்முறையாக பட்டம் வெல்ல துடிப்புடன் இருக்கும் ஹிர்வஸ்கா எனப்படும் குரேஷியா அணி எதிர்முனையில்... 21-ஆவது உலகக்கோப்பை கால்பந்து யுத்தத்தை அரங்கேற்ற தயாராக இருக்கிறது மாஸ்கோ லுஸ்நிகி விளையாட்டரங்கம்.
பிரேசில், அர்ஜென்டினா, ஜெர்மனி, இத்தாலி ஆகிய அணிகள் இன்றி உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் இறுதியாட்டம் நடைபெறுவது இது இரண்டாவது முறை. ஏற்கனவே 2010-ஆம் ஆண்டு ஸ்பெயின் மற்றும் நெதர்லாந்து அணிகள் இறுதியாட்டத்தில் பலப்பரீட்சை நடத்தின. இரண்டு முறை கோப்பையை வென்ற பட்டியலில் இருக்கும் அர்ஜென்டினா, உருகுவே ஆகிய அணிகளின் பட்டியலில் இணைய பிரான்ஸ் அணிக்கு இப்போது வாய்ப்பு கிட்டியுள்ளது.
நடப்பு உலக்கோப்பை தொடரில் இளம் வீரர்களை அதிகம் உள்ளிட்டக்கிய இரண்டாவது அணியாக இருக்கிறது பிரான்ஸ். அனுபவ வீரர்களின் பலத்துடன் களமிறங்குகிறது குரேஷியா. பிரான்ஸ் வீரர் எம்பாப்வே-யின் இளந்துடிப்பும், குரேஷிய வீரர் லூகா மோட்ரிச்சின் அனுபவ ஆற்றலும் முன்களத்தில் போட்டியிடுகின்றன. முதல் முறையாக பட்டம் வென்று வரலாறு படைக்கும் முயற்சியுடன் இருக்கிறது குரேஷியா. போட்டி முடிந்ததும் வெற்றி யாருக்கு என தெரிந்துவிடும்.