மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கியை முதல் முறையாக வென்ற இந்திய அணி! குவியும் பாராட்டுக்கள்

மகளிர் ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி 2023 தொடரின் இறுதிப்போட்டியில் கொரியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து முதல்முறையாக கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது, இந்திய மகளிர் ஜூனியர் அணி.
Women's Hockey Junior Asia Cup
Women's Hockey Junior Asia CupTwitter

2023ஆம் ஆண்டு மகளிர் ஜூனியர் ஹாக்கி ஆசியக்கோப்பை தொடரானது கடந்த ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 12ஆம் தேதி வரை நடைபெற்றது. ஜப்பானில் நடைபெற்ற இந்த சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி பங்குபெற்று விளையாடியது.

தொடர் முழுக்க சிறப்பாக விளையாடிய இந்திய ஜூனியர் மகளிர் அணி, இறுதிப்போட்டிக்கு செல்வதற்கான குவாலிஃபயர் போட்டியில் ஜப்பானை எதிர்கொண்டு விளையாடியது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் சுனெலிதா அடித்த அற்புதமான கோலை தொடர்ந்து 1-0 என்ற கணக்கில் ஜப்பானை வீழ்த்திய இந்தியா, இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

முதல் முறையாக ஆசியக்கோப்பையை வென்ற இந்திய ஜுனியர் மகளிர் அணி!

மற்றொரு குவாலிஃபயர் போட்டியில் சைனாவை வீழ்த்திய கொரியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் இந்தியா மற்றும் கொரியா அணிகள் கோப்பைக்கான கடைசிப்போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

ஜூன் 11ஆம் தேதியான இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் போட்டியின் 22வது நிமிடத்தில் பெனால்டி கார்னர் ஷாட்டை பயன்படுத்தி இந்திய வீராங்கனை அன்னு முதல் கோலை இந்தியாவிற்கு கொண்டுவந்தார். மறுபுறம் முதல் கோலிற்கான வாய்ப்பை தேடிவந்த கொரியா அணிக்கு, வெறும் 3 நிமிடங்களை மட்டுமே எடுத்துக்கொண்ட பார்க் சியோ யோன் கொரியாவிற்கு முதல் கோலை எடுத்துவந்து இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தார்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 41வது நிமிடத்தில் இரண்டாவது கோலை அடித்த இந்திய வீராங்கனை நீலம் மீண்டும் இந்தியாவை முன்னிலைக்கு கொண்டுவந்தார். அதற்கு பிறகு கொரியா அணியை இறுதிவரை கோலடிக்க விடாமல் அற்புதமான தடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி, முதல் முறையாக ஹாக்கி ஆசியக்கோப்பையை தட்டிச்சென்றது.

எதிர்வரும் ஜுனியர் உலகக்கோப்பைக்கு இதுஒரு சிறந்த அடித்தளமாக இருக்கும்! - ஹாக்கி இந்தியா தலைவர் பாராட்டு

ஹாக்கி இந்தியா தலைவரான திலிப் டிர்கி, ஆசியக்கோப்பையை வென்ற இந்திய ஜூனியர் மகளிர் அணியை பாராட்டினார். வெற்றி குறித்து பேசிய அவர், “இந்திய ஜூனியர் மகளிர் அணி தங்கள் முதல் ஜூனியர் ஆசியக் கோப்பையைக் கைப்பற்றியதில் நாங்கள் மிகுந்த பெருமை அடைகிறோம். அவர்களின் திறமையும், ஆட்டத்தில் காட்டிய உறுதித்தன்மையும் அவர்களால் என்ன செய்யமுடியும் என்பதை நிரூபித்துக்காட்டியது. இந்த வெற்றியானது எதிர்வரும் ஜூனியர் உலகக் கோப்பைக்கு ஒரு வலுவான அடித்தளமாக இருக்கும்” என்று பாராட்டியுள்ளார்.

2023ஆம் ஆண்டு மகளிர் ஜூனியர் ஆசியக் கோப்பையை வென்று சாதனை படைத்த வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சமும், துணைப் பணியாளர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் ரொக்கப் பரிசு வழங்கப்படும் என ஹாக்கி இந்தியா அறிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com