குறுக்கிட்டது மழை.. நூலிழையில் தப்பியது இந்திய மகளிர் அணி! 3வது முறை அரையிறுதிக்கு தகுதி!

குறுக்கிட்டது மழை.. நூலிழையில் தப்பியது இந்திய மகளிர் அணி! 3வது முறை அரையிறுதிக்கு தகுதி!
குறுக்கிட்டது மழை.. நூலிழையில் தப்பியது இந்திய மகளிர் அணி! 3வது முறை அரையிறுதிக்கு தகுதி!

இன்று நடைபெற்ற அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றிபெற்றதால், டி20 உலகக்கோப்பை அரையிறுதி போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

8வது மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர் தென்னாப்பிரிக்காவில் கடந்த பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 அணிகள் பங்கேற்ற இந்தத் தொடரில், குரூப் 1 பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகளும், குரூப் 2இல் இங்கிலாந்து, இந்தியா, அயர்லாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

லீக் போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் மோதும். இந்த நிலையில் ஹர்மன் ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, முதல் போட்டியில் பாகிஸ்தானையும், 2வது போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியையும் வென்றிருந்த நிலையில், 3வது போட்டியில் இங்கிலாந்து அணியிடம் போராடி தோல்வி கண்டது. இந்த நிலையில் இந்திய மகளிர் அணி தன்னுடைய கடைசி லீக் போட்டியில் இன்று அயர்லாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.

வாழ்வா சாவா போட்டி! இந்தியா வலுவான பேட்டிங்

இதில் வெற்றிபெற்றால் அரையிறுதிக்குச் செல்லலாம் என்ற வாழ்வா, சாவா என்ற சூழலில் இந்திய அணி களமிறங்கியது. அதன்படி, இன்றைய போட்டியில் டாஸ் ஜெயித்த இந்திய அணி, முதலில் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தது. வழக்கம்போல் ஷபாலி வர்மாவும், ஸ்மிருதி மந்தனாவும் தொடக்க பேட்டர்களாக களமிறங்கினர். அதிரடியாய் ஆடிய ஷபாலி 24 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் 19வது ஓவர் வரை களத்தில் நின்ற துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா 56 பந்துகளில் 87 ரன்கள் குவித்தார். இதில் 9 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கம். மறுபுறம் கேப்டன் கவுர் 13 ரன்களிலும், ஜெமிமா ரோட்ரிக்ஸ் 19 ரன்களிலும் வெளியேறினர்.

குறுக்கிட்டது மழை.. நூலிழையில் இந்தியா வெற்றி

இறுதியில் இந்திய மகளிர் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. பின்னர் கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து மகளிர் அணியும் அதிரடியில் கலக்கியது. இடையில் அவ்வணி 2 விக்கெட்களை இழந்தபோது, மழை குறுக்கிட்டது. அப்போது அந்த அணி 8.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்திருந்தது. தொடர்ந்து மழை பெய்தபடியே இருந்ததால், டக்வொர்த் விதிமுறை கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி, இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம், இந்திய மகளிர் அணி 3வது முறையாக அரையிறுதிக்குத் தகுதிபெற்றது. இதற்கு முன்பாக 2018 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் அரையிறுதிக்கு தகுதி பெற்றது. 

மழைக்குறுக்கிடும் போதும் அயர்லாந்து அணி இன்னும் 5 ரன்கள் கூடுதலாக அடித்திருந்தால் இந்திய அணி வெற்றி கேள்விக்குறியாகி இருக்கும். அதனால், நூலிழையில் இந்திய அணி தோல்வியில் இருந்து தப்பியுள்ளது. அயர்லாந்து அணியில் கெபி லூயில் பவுண்டரிகளாக விளாசி இந்திய அணிக்கு பயம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவர் 25 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதனால், மழை குறுக்கிட்டிருக்காவிட்டாலும் போட்டி இருதரப்பினருக்கும் கடினமானதாகவே இருந்திருக்கும்.

புள்ளிகளும் அரையிறுதி வாய்ப்பும்

குரூப் 2 பிரிவில் இந்திய மகளிர் அணி இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி முதலிடத்தில் உள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் இங்கிலாந்து முதலிடத்தில் நீடிக்கவே வாய்ப்புள்ளது. ஏனெனில் அந்த அணி ரன் ரேட்டில் முன்னிலையில் உள்ளது. அதனால், இந்திய அணிக்கு இரண்டாம் இடம் நிச்சயம். இரண்டாம் இடம் என்பதால் அரையிறுதிப் போட்டியில் குரூப்1-ல் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதும். ஆஸ்திரேலிய அணி மிகவும் பலமாக இருப்பதால் நிச்சயம் அந்தப் போட்டி டஃப் ஆக இருக்கும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com