அதானி குழுமம் போட்டி போட்டு ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை! எத்தனை கோடிக்கு தெரியுமா?

அதானி குழுமம் போட்டி போட்டு ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை! எத்தனை கோடிக்கு தெரியுமா?
அதானி குழுமம் போட்டி போட்டு ஏலம் எடுத்த ஆஸ்திரேலிய வீராங்கனை! எத்தனை கோடிக்கு தெரியுமா?

ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப்பிறகு கடும் சரிவைச் சந்தித்து வரும் அதானி குழுமம், ஆஸ்திரேலிய வீராங்கனையான ஆஷ்லே கேத்தரின் கார்ட்னரை, இன்று நடைபெற்ற மகளிர் ஐபிஎல் ஏலத்தில் ரூ.3.2 கோடிக்கு வாங்கியுள்ளது.

இந்தியாவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் திருவிழாவாகக் கருதப்படும் ஆடவர் ஐபிஎல்லைப் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தற்போது வேகம் பிடித்து வருகின்றன. இந்த ஐபிஎல் சீசனில் 5 (அகமதாபாத், லக்னோ, டெல்லி, மும்பை, பெங்களூரு) மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.

இந்த அணிகளை ஏலம் எடுக்கும் நிகழ்வு கடந்த மாதம் நடைபெற்றது. அதன்படி, கடந்த மாதம் எடுக்கப்பட்ட அணிகளின் ஏலத்தில், அகமதாபாத் அணியை அதாவது குஜராத் ஜெயண்ட்ஸ் அணியை, அதானி நிறுவனம் ரூ.1,289 கோடிக்கும், மும்பை அணியை (மும்பை இந்தியன்ஸ்) ரிலையன்ஸ் நிறுவனம் ரூ. 912.99 கோடிக்கும், பெங்களூரு அணியை ராயல் சேலஞ்சர்ஸ் நிறுவனம் ரூ. 901 கோடிக்கும், டெல்லி அணியை (டெல்லி கேபிடல்ஸ்) ஜேஎஸ்டபிள்யூ ஜிஎம்ஆர் நிறுவனம் ரூ. 810 கோடிக்கும், லக்னோ அணியை (யுபி வாரியர்ஸ்) கேப்ரி குளோபல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் ரூ. 757 கோடிக்கும் ஏலம் எடுத்திருந்தன.

பரபரப்பாக நடைபெற்ற ஏலம்!

மகளிர் ஐபிஎல் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் இன்று நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மும்பையில் இன்று 2.30 மணிக்கு ஏலம் தொடங்கியது. இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா ரூ.3.4 கோடிக்கும், நியூசிலாந்து ஆல்ரவுண்டர் சோஃபி டிவைன் ரூ.50 லட்சத்துக்கும் பெங்களூரு அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். இந்திய மகளிர் அணியின் கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுரை, மும்பை அணி ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுத்தது.

ஆஸ்திரேலிய வீராங்கனை ஏலம் எடுத்த அதானி குழுமம்

குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக, ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் வீராங்கனையான ஆஷ்லே கேத்தரின் கார்ட்னரை ரூ.3.2 கோடிக்கு அதானி நிறுவனம் வாங்கியுள்ளது. இவரை வாங்குவதற்கு அதானி குழுமத்துடன் மும்பை அணியும், லக்னோ அணியும் கடுமையாகப் போட்டியிட்டன. எனினும், அவரை விடாது, அதானி குழுமம் தட்டித் தூக்கியது. இவர், ஆஸ்திரேலிய அணிக்கு டி20 உலகக்கோப்பையை 2 முறை வாங்கிக் கொடுக்க காரணமாக இருந்தவர். இவர் ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனை விருதை கடந்த 2021-22ஆம் ஆண்டில் பெற்றவர். மேலும் இவர், டி20 சிறந்த ஆல்ரவுண்டராகக் கருதப்படுகிறார்.

ஆஸ்திரேலியாவில் சுரங்கத் தொழிலை மேற்கொண்டு வருவதால்தான் அதானி குழுமம், அந்நாட்டு வீராங்கனைக்கு முன்னுரிமை அளித்திருப்பதாக ஏற்கெனவே ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், தற்போது அது உறுதியாகி இருக்கிறது. முன்னதாக, அகமதாபாத் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீராங்கனை ரேச்சல் ஹெய்ன்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கைக்குப் பிறகு அதானி குழுமம் கடந்த சில நாட்களாக வீழ்ச்சியைச் சந்தித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com