மகளிர் ஐபிஎல்: முதல் போட்டியிலேயே அம்பானியுடன் மோதும் அதானி!

மகளிர் ஐபிஎல்: முதல் போட்டியிலேயே அம்பானியுடன் மோதும் அதானி!
மகளிர் ஐபிஎல்: முதல் போட்டியிலேயே அம்பானியுடன் மோதும் அதானி!

இந்த ஆண்டு முதன்முறையாக தொடங்க இருக்கும் மகளிர் ஐபிஎல் போட்டியில் அதானியின் குஜராத் அணியும், அம்பானியின் மும்பை அணியும் முதல் போட்டியில் மோத இருக்கின்றன.

இந்தியாவில் மிகப் பிரபலமான கிரிக்கெட் திருவிழாவாகக் கருதப்படும் ஆடவர் ஐபிஎல்லைப் போன்று, மகளிருக்கும் ஐபிஎல் போட்டிகள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்துவருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தொடங்க இருக்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகள் தற்போது வேகம் பிடித்து வருகின்றன. இந்த ஐபிஎல் சீசனில் 5 மகளிர் அணிகள் பங்கேற்க உள்ளன.

அதன்படி, அகமதாபாத் (குஜராத் ஜெயண்ட்ஸ்), லக்னோ (யுபி வாரியர்ஸ்), டெல்லி (டெல்லி கேபிடல்ஸ்), மும்பை (மும்பை இந்தியன்ஸ்), பெங்களூரு (ராயல் சேலஞ்சர்ஸ்) ஆகிய அணிகள் பங்கேற்க உள்ளன. இதற்கான அணிகள் கடந்த மாதம் ஏலம் எடுக்கப்பட்ட நிலையில், வீராங்கனைகள் கடந்த 13ஆம் தேதி மும்பையில் ஏலம் எடுக்கப்பட்டனர்.

இதில் இந்திய அணியின் தொடக்க வீராங்கனையும் துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா பெங்களூரு அணியால் ரூ.3.4 கோடிக்கும், கேப்டனான ஹர்மன்ப்ரீத் கவுர், மும்பை அணியால் ரூ.1.8 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டனர். ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஷ்லே கார்ட்னர், அதானியின் குஜராத் அணியால் ரூ.3.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இந்திய அணியின் இளம்வீராங்கனை ஷபாலி வர்மாவை, ரூ.2 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது. மேலும் இந்திய அணியின் தீப்தி ஷர்மா (ரூ.2.6 கோடி, லக்னோ), பூஜா வஸ்ட்ராகர் (ரூ.1.9 கோடி, மும்பை), யாஸ்திகா பாட்டியா (ரூ.1.30 கோடி, மும்பை), ரிச்சா கோஷ் (ரூ.1.9 கோடி, பெங்களூரு), ரேணுகா சிங் (ரூ.1.30 கோடி, பெங்களூரு), தேவிகா வைத்யா (ரூ.1.4 கோடி, லக்னோ) ஆகியோர் ஏலம் எடுக்கப்பட்டனர்.

வெளிநாட்டு வீராங்கனைகளில் ஆஸ்திரேலியாவின் பெத் மூனி ரூ.2 கோடிக்கு குஜராத் அணியாலும், இங்கிலாந்தின் சோபி எக்லெஸ்டன் ரூ.1.8 கோடிக்கு லக்னோ அணியாலும், ஆஸ்திரேலியாவின் எலிஸ் பெர்ரி ரூ.1.7 கோடிக்கு பெங்களூரு அணியாலும், தாலியா மெக்ராத் ரூ.1.4 கோடிக்கு லக்னோ அணியாலும், மெக் லானிங் ரூ.1.1 கோடிக்கு டெல்லி அணியாலும், தென்ஆப்பிரிக்கா மரிஜானே காப் ரூ.1.30 கோடிக்கு டெல்லி அணியாலும் அதிக விலைக்கு எடுக்கப்பட்டனர். 448 வீராங்கனைகள் இந்த ஏலத்தில் பங்கேற்ற நிலையில், 87 வீராங்கனைகள் மொத்தமாக வாங்கப்பட்டுள்ளனர். இதில் 30 வீராங்கனைகள் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இந்த நிலையில், மகளிரி ஐபிஎல் போட்டிக்கான அட்டவணை பிசிசியால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மார்ச் 4ஆம் தேதி போட்டி தொடங்கி, மார்ச் 26ஆம் தேதி நிறைவடைகிறது. இப்போட்டிகள் மும்பையில் உள்ள 2 மைதானங்களில் நடைபெற உள்ளது. மொத்தம் 22 ஆட்டங்கள் நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன. இதுவரை எந்த அணிகளுக்கும் கேப்டன்கள் அறிவிக்கப்படாத நிலையில், குஜராத் அணிக்கு அதிக விலைக்கு எடுக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலிய வீராங்கனை ஆஸ்லே கார்ட்னரும், மும்பை அணிக்கு ஹர்மன்ப்ரீத் ஹவுரும் கேப்டனாக தேர்வுசெய்யப்படுவார்கள் எனச் சொல்லப்படுகிறது.

ஐபிஎல் மகளிர் 2023 போட்டிக்கான அட்டவணை

- ஜெ.பிரகாஷ்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com