மகளிர் கிரிக்கெட் உலகக்கோப்பை யாருக்கு?: இந்தியா - இங்கிலாந்து நாளை பலப்பரீட்சை
மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது.
11-வது மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 4 இடங்களை பிடித்த இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதலாவது அரை இறுதியில் இங்கிலாந்து அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 2-வது அரை இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இந்நிலையில் மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வெல்லும் முனைப்பில் இங்கிலாந்து அணியை நாளை எதிர்கொள்கிறது. லண்டன் லாட்ஸ் மைதானத்தில் இந்திய நேரப்படி நாளை பிற்பகல் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. லீக் சுற்றில் இங்கிலாந்து அணியை வென்ற உற்சாகத்துடன் இந்திய அணி களமிறங்குகிறது.
இதனிடையே இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்திய அணிக்குப் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது பிசிசிஐ. இதன்படி இந்திய அணியில் உள்ள ஒவ்வொரு வீராங்கனைக்கும் ரூ.50 லட்சம் பரிசாக வழங்கப்படும் என பி.சி.சி.ஐ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.