மகளிர் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அமெரிக்கா சாம்பியன்
மகளிர் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அமெரிக்க அணி சாம்பியன் பட்டம் வென்றது. விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி அமெரிக்க அணி வாகை சூடியது.
பிரான்சின் லியோன் நகரில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்து அமெரிக்க அணி விளையாடியது. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் எதிர் அணியின் கோல் பகுதிக்குள் புகுந்த அமெரிக்க அணிக் கேப்டன் அலெக்ஸ் மோர்கனை, நெதர்லாந்து வீராங்கனை வேன் டேர் கிரக்ட் காலால் உதைத்து கீழே விழச் செய்தார்.
இதனையடுத்து வீடியோ நடுவர் உதவியுடன் நடுவர் நெதர்லாந்து அணிக்கு எதிராக பெனால்டி வழங்கினார். 61 ஆவது நிமிடத்தில் கிடைத்த இந்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி, அந்த அணியின் நட்சத்திர வீராங்கனை மேகன் ரபினோ கோல் அடித்தார். இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 69 நிமிடத்தில் ரோஸ் லேவல் நேர்த்தியாக பந்தை கடத்திச் சென்று அமெரிக்க அணிக்கான இரண்டாவது கோலை அடித்தார்.
விறுவிறுப்பு நிறைந்த இறுதிப்போட்டியின் முடிவில் அமெரிக்க அணி இரண்டுக்கு பூஜ்யம் என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று வாகை சூடியது. இதன் மூலம் மகளிர் உலகக்கோப்பையில் அமெரிக்க அணி நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.