
விராட் கோலி சிறப்பான முறையில் கேப்டன் பொறுப்பை மேற்கொண்டு வருவதாக, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷகித் அஃப்ரிடி கூறியுள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 1-2 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்தது. டெஸ்ட் தொடரில் பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். இதனால், இந்திய அணி மீதும் கேப்டன் விராட் கோலி மீதும் விமர்சனங்கள் எழுந்தது. இதனையடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று இந்திய அணி அசத்தியுள்ளது. கேப்டன் விராட் கோலி இரண்டு போட்டிகளில் சதம் அடித்து அசத்தினார். சுழற்பந்து வீச்சாளர்கள் சாஹல், குல்தீப் யாதவ் விக்கெட்டுகளை அள்ளினார்கள். இதனால், இந்திய அணி மீதான விமர்சனங்களை மறைந்து பாராட்டு மழை பொழிகிறது. கேப்டன் விராட் கோலியையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், விராட் கோலியின் தலைமை இந்திய அணியை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றுள்ளதாக ஷகித் அஃப்ரிடி கூறியுள்ளார். ‘முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மிகவும் கூல் ஆன மனிதர், அவருடைய தலைமை வேறு மாதிரி இருக்கும். அதேபோல், கோலி ஆக்ரோஷமான தன்மையுடன் தலைமையை கையாள்கிறார். இது இளைய தலைமுறை வீரர்களுக்கும், அணிக்கும் பயனுள்ளதாக உள்ளது’ என்றார் அஃப்ரிடி.
மேலும், “இளம் வீரர்கள் சிக்கலில் இருக்கும் போது அவர்களுக்கு ஒரு கேப்டன் ஆதரவு அளித்தார், அவர் மீதான மரியாதை அதிகரிக்கும்” என்றும் அஃப்ரிடி கூறினார்.