அதிரடி.. ஆக்ரோஷம்... ஆரவாரம்...கங்குலி என்னும் நான்..!
கிரிக்கெட்டின் தாதா என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் சவுரவ் கங்குலி இன்று தனது 46ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலி நிகழ்த்திய சாதனைகளை தெரிந்து கொள்வோம்.
கால்பந்து விளையாட்டை அதிகம் நேசிக்கும் மேற்குவங்க மாநிலத்தில் 1972ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி பிறந்தார் சவுரவ் கங்குலி. சிறு வயதில் கங்குலிக்கும் கால்பந்து மீது தான் நாட்டம் இருந்தது. பின்னர் தனது அண்ணன் Snehasish அளித்த பயிற்சியால் கிரிக்கெட்டின் பக்கம் கவனத்தை செலுத்தத் தொடங்கினார் கங்குலி.
ரஞ்சி, துலீப் கோப்பை போன்ற முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் ஜொலித்ததால், 1992ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாட தேர்வானார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய கங்குலி, பின்னர் தனது அதிரடி ஆட்டங்களால் சாதனைகளை அடுக்கினார்.
ரசிகர்களின் பேரன்பைப் பெற்ற கங்குலி, பெங்கால் டைகர். கொல்கத்தா இளவரசர், கிரிக்கெட் தாதா என செல்லமாக அழைக்கப்பட்டார். ஆப் சைடு ஆண்டவர் என்றும் போற்றப்படுகிறார். எதிரணியினர் ஆப் சைடில் எத்தனை வீரர்களை நிறுத்தி வைத்திருந்தாலும், பந்தை பவுண்டரிக்கு அனுப்புவதில் வல்லவர்.
சிக்ஸர் விளாசுவதிலும் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தவர் கங்குலி. இறங்கி வந்து அடித்தால், பந்து மைதானாத்திற்கே வெளியே பறக்கும். இதுவே கங்குலி ஷாட்டின் ஸ்பெஷல்.
அதிரடியாக விளையாடக்கூடிய ஒருநாள் போட்டிகளில் மட்டுமன்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் சிறந்து செயல்பட்டார். 1996ஆம் ஆண்டில் இங்கிலாந்து உடனான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக 4 முறை ஆட்ட நாயகன் விருது வென்றனர், ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 3 சதங்கள் அடித்த முதல் வீரர் போன்ற சாதனைகளையும் அரங்கேற்றியுள்ளார். 1999 உலகக்கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் 183 ரன்கள் விளாசினார். அதிரடி ஆட்டத்தால் மட்டுமன்றி பகுதி நேர பந்துவீச்சாலும் பலமுறை இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்திருக்கிறார்.
சக வீரராக மட்டுமன்றி சாதனைக் கேப்டனாகவும் தன்னை அடையாளப்படுத்தினார். 1999 - 2000 ஆம் ஆண்டில் எழுப்பப்பட்ட சூதாட்ட விவகாரம் எழுந்தது. அப்போது அணியின் கேப்டனாக இருந்தார் சச்சின். அப்போது இந்திய அணியின் அஸாருதீன், மோங்கியா, ஜடேஜா, முன்னாள் வீரர் மனோஜ் பிரபாகர் மீது சூதாட்டப் புகார் எழுந்தது. அப்போது இந்திய அணியும் சோபிக்காததால் சச்சின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனையடுத்து கங்குலியை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. இப்படியொரு இக்கட்டான சூழலில் கேப்டன் பொறுப்பை ஏற்ற கங்குலி இந்திய அணியை கட்டமைத்தார். பின்பு 2003 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியை இறுதிப் போட்டி வரை அழைத்துச் சென்றார்.
ஆஸ்திரேலியா போன்ற அணிகளுக்கு அதன் சொந்த மண்ணிலேயே சவால் விடும் வகையில் இந்திய அணியை வழிநடத்திச் சென்ற பெருமையும் கங்குலியையே சேரும். வெளிநாடுகளில் 28 டெஸ்ட் போட்டிகளில் , 11ல் வெற்றியை பெற்றுக் கொடுத்து இந்தியாவின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர்.
தற்போது மைதானத்தில் ஆக்ரோஷத்தைக் காட்டும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு, கங்குலியின் தலைமையே உத்வேகம் என்றால் அது மிகையாகாது. கிரிக்கெட்டின் மெக்காவாக கருதப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றி பெற்ற பிறகு 2002ஆம் ஆண்டு , தனது சட்டையைக் கழற்றி சுற்றியதை யாராலும் மறக்க முடியாது. வான்கடே மைதானத்தில் இங்கிலாந்து வீரர் பிளின்டாப் செய்ததற்கு பதிலடியாகவே தானும் சட்டையைக் கழற்றி சுட்டியதாக தாதா பின்னர் விளக்கமளித்தார்.
பயிற்சியாளர் சேப்பலுடன் ஏற்பட்ட மோதல் கங்குலிக்கு கசப்பான அனுபவம் தான். கிரிக்கெட்டில் இருந்து வீரராக ஓய்வு பெற்று விட்டாலும், நிர்வாகியாக இன்றும் தனது பயணத்தைத் தொடர்கிறார் கங்குலி.