இன்று 3 வது ஒரு நாள் போட்டி: ’ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா விராத் கோலி?
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விராத் கோலி ஹாட்ரிக் சதம் விளாசுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இரு அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் இப்போது நடந்து வருகிறது. முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்தது.
இதில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி விசாகப்பட்டினத்தில் நடந்தது. இந்த போட்டி யாரும் எதிர்பாராத வகையில் சமனில் முடிவடைந்தது. இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, இந்த இரண்டு போட்டியிலும் சதம் அடித்து மிரட்டினார்.
இந்நிலையில் 3வது ஒரு நாள் போட்டி புனேவில் இன்று நடக்கிறது. இந்திய அணியில் கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கினர். இதனால் ஓய்வில் இருந்த புவனேஷ்வர் குமாரும், பும்ராவும் அணிக்கு திரும்பியுள்ளனர். இவர்கள் வருகை அணிக்கு பலமானதாக இருக்கும் என நம்பலாம். ரிஷாப் காயம் அடைந்துள்ளதால் இன்றைய போட்டியில் அவருக்கு பதில் மனிஷ் பாண்டே சேர்க்கப்படலாம் எனத் தெரிகிறது.
முதல் 2 ஆட்டங்களிலும் சதம் விளாசிய விராத் கோலி, ‘ஹாட்ரிக்’ சதம் விளாசுவாரா என்கிற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர். அதே நேரத்தில் விராத் கோலியை எப்படி கட்டுப்படுத்தலாம் என வெஸ்ட் இண்டீஸ் அணி வியூகம் அமைத்துள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் வீரர் ஹெட்மையர் முதல் போட்டியில் சதம் அடித்தார். இரண்டாவது போட்டியில் 94 ரன்கள் எடுத்தார். அவர் இந்திய பந்து வீச்சை நாலாபுறமும் விளாசித் தள்ளினார். அவரைப் போல விக்கெட் கீப்பர் சாய் ஹோப், முந்தைய ஆட்டத்தில் சதம் அடித்தார்.
(ஹெட்மையர்)
அனுபவ வீரர் சாமுவேல்ஸும் ஃபார்முக்கு திரும்பினால், வெஸ்ட் இண்டீசின் பேட்டிங் வரிசை வலுவானதாக மாறும். இதே போல் பந்து வீச்சிலும் அந்த அணி சிறப்பாக செயல்பட்டால் கடும் சவால் கொடுக்கலாம்.
இந்த மைதானம் பேட்டிங்கிற்கு சாதகமானது என்பதால் இரு அணிகளுமே அதிரடியாக ரன் மழை பொழியும் என எதிர்பார்க்கலாம். போட்டி இன்று மதியம் 1.30 மணிக்குத் தொடங்குகிறது.