உயரம் 6.5 அடி, எடை 140 கிலோ: வெஸ்ட் இண்டீஸ் அணியில் ’வாவ்’ ஆல்ரவுண்டர்!
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில், அதிக எடை கொண்ட ஆல் ரவுண்டர் நேற்று அறிமுகமாகியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இந்த அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி, ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் நேற்று தொடங்கியது. இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் புதிய வீரர் அறிமுகம் செய்யப்பட்டார். அவரது உயரம், 6 அடி 5 அங்குலம். உடல் எடை 140 கிலோ. வெஸ்ட் இண்டீசின் 319-வது டெஸ்ட் வீரரான அவரது பெயர் ரஹீம் கார்ன்வல் (Rahkeem Cornwall).
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக எடை கொண்ட வீரராக அறியப்படும் இவர், பேட்டிங் மற்றும் சுழற் பந்துவீச்சில் கலக்குகிறார். நேற்றைய போட்டியில் புஜாரா விக்கெட்டை வீழ்த்தி, தனது விக்கெட் கணக்கைத் தொடங்கியுள்ளார். இதற்கு முன், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் வார்விக் ஆம்ஸ்ட்ராங் 133 முதல் 139 கிலோ வரை எடை இருந்ததே அதிகப் பட்சமாக இருந்தது. அதை முந்தியிருக்கிறார் ரஹீம் கார்ன்வல்.
வெஸ்ட் இண்டீஸ் முதல் தரப் போட்டியில், லீவார்ட் தீவுகள் அணிக்காக ஆடும் ரஹீம், 55 போட்டிகளில் விளையாடி 2224 ரன்கள் எடுத்துள்ளார். 260 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக்கிறார். இந்திய போர்ட் பிரசிடென்ட் லெவன் அணிக்கு எதிராக, 2016 ஆம் ஆண்டு ஆடிய இவர், சிறந்த ஆல் ரவுண்ட் திறமையை வெளிப்படுத்தியதை அடுத்து கவனிக்கப்பட்டார்.
கடந்த மாதம் இந்திய ஏ அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியபோது, 2 போட்டிகளில் பங்கேற்ற ரஹீம் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இரண்டு அரை சதங்களையும் விளாசியிருந்தார்.