வில்லியம்சன் விளாசல் வீண்: பெங்களூரு திரில் வெற்றி

வில்லியம்சன் விளாசல் வீண்: பெங்களூரு திரில் வெற்றி

வில்லியம்சன் விளாசல் வீண்: பெங்களூரு திரில் வெற்றி
Published on

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 51-வது லீக் போட்டியில் சன்ரைசர் ஐதராபாத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. பெங்களூரில் நடந்த இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்தது. 

பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், விராத் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பார்த்தீவ் ஒரு ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து கேப்டன் விராத் கோலி 12 ரன்னில் ரஷித் கான் சுழலில் போல்டானார். பின்னர் களமிறங்கிய ஏபி டிவில்லியர்ஸும், மொயின் அலியும் ஐதராபாத் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். மைதானம் சிறியது என்பதால் தொட்ட பந்துகள் எல்லாம் பவுண்டரிக்கும் சிக்சருக்கும் பறந்தன. அதோடு ஐதராபாத்தின் பீல்டிங்கும் நேற்று மோசமாக இருந்தது. பல கேட்ச்-களை கோட்டை விட்டனர்.

மொயின் அலி 25 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளிலும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த இந்த ஜோடி, ரஷித் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது. டிவில்லியர்ஸ் 39 பந்துகளில் 69 ரன்களும், மொயின் அலி 34 ரன்களில் 65 ரன்களும் எடுத்தனர். கடைசியில் கிராண்ட்ஹோம் 17 பந்துகளில் 40 ரன்கள் விளாச,  பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் 3, சித்தார்த் கவுல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

இதையடுத்து, 219 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. அந்த அணியில் ஷிகர் தவானும் ஹேல்ஸும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். தவான் 18 ரன்களிலும் ஹேல்ஸ் 37 ரன்களிலும் வெளியேறினர்.

இருந்தாலும் கேப்டன் வில்லியம்சன் பெங்களூருக்கு சரியான பதிலடி கொடுத்தார். அவர் மைதானத்தில் இருக்கும்வரை ஐதராபாத் அணி வெற்றி பெறும் என்ற நிலையிலேயே இருந்தது. அவருக்கு துணையாக மனீஷ் பாண்டேவும் அடித்து ஆடினார்.

கடைசி ஓவரில் ஐதராபாத்தின் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரை முகமது சிராஜ் வீசினார். முதல் பந்தில் வில்லியம்சன் அவுட் ஆனார். அவர் அவுட் ஆனதும் ஐதராபாத்தின் நம்பிக்கை உடைந்தது. அவர் 42 பந்துகளில் 81 ரன்கள் விளாசினார். அடுத்த 5 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே அந்த அணியால் எடுக்க முடிந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் ஐதராபாத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை மட்டுமே எடுத்தது. மனீஷ் பாண்டே 38 பந்துகளில் 62 ரன்கள் விளாசி கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து பெங்களூரு அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் பிளே ஆப் வாய்ப்பை பெங்களூர் அணி தக்கவைத்துள்ளது. 


 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com