தடுப்பு ஆட்டத்தில் கெத்துகாட்டும் ஸ்பெயின் அணி; இந்த சவாலை வெல்லுமா? #FIFAWorldCup2022

தடுப்பு ஆட்டத்தில் கெத்துகாட்டும் ஸ்பெயின் அணி; இந்த சவாலை வெல்லுமா? #FIFAWorldCup2022
தடுப்பு ஆட்டத்தில் கெத்துகாட்டும் ஸ்பெயின் அணி; இந்த சவாலை வெல்லுமா? #FIFAWorldCup2022

கடந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் அசைக்க முடியாத அணியாக வலம் வந்த ஸ்பெயின் அதன் பின் தடுமாறத் தொடங்கியது. அடுத்தடுத்த உலகக் கோப்பைகளில் விரைவிலேயே வெளியேறியது.

ஆனால் லூயிஸ் என்ரீகே தன் இளம் படையை கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக பட்டை தீட்டிக்கொண்டிருக்கிறார். மீண்டும் உலகக் கோப்பையை வெல்லவேண்டும் என்ற உத்வேகத்தோடு கத்தார் பயணித்திருக்கிறது ஸ்பெய்ன். இந்தத் தொடரில் அந்த அணிக்கு இருக்கும் வாய்ப்புகள், பலம், பலவீனம் என்ன? அந்த அணியின் நம்பிக்கை யார்? என்று விரிவாக பார்க்கலாம்

பயிற்சியாளர்: லூயிஸ் என்ரீக்கே
FIFA ரேங்கிங்: 7
2022 உலகக் கோப்பை பிரிவு: E
பிரிவில் இருக்கும் அணிகள்: ஜெர்மனி, ஜப்பான், கோஸ்டா ரிகா

உலகக் கோப்பையில் இதுவரை:

ஸ்பெயின் அணிக்கு இது 15-வது உலகக் கோப்பை தொடர். 1978 முதல் எந்தத் தொடரையும் தவறவிடாமல் தொடர்ந்து பங்கேற்றுக் கொண்டிருக்கிறது. 2010 ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த தொடரை வென்று, ஐரோப்பாவுக்கு வெளியே கோப்பையை வென்ற முதல் ஐரோப்பிய அணி என்ற சாதனையை படைத்தது ஸ்பெயின். அதைத் தவிர்த்து அந்த அணியின் சிறப்பான செயல்பாடுகள் என்றால், அது 1950 உலகக் கோப்பையில் (13 நாடுகளே பங்கேற்றன) நான்காம் இடம் பிடித்ததும், 2002 உலகக் கோப்பையில் ஐந்தாவது இடம் பிடித்ததும் தான். 2018 உலகக் கோப்பையில் ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில், தொடரை நடத்திய ரஷ்யாவுக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் தோற்று வெளியேறியது ஸ்பெயின் அணி.

தகுதிச் சுற்று செயல்பாடு:

2022 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஸ்பெயின் அணிக்கு எளிதாக இருக்கவில்லை. ஸ்வீடன், கிரீஸ், ஜார்ஜியா, கொசோவா அணிகளுடன் இடம் பிடித்திருந்த ஸ்பெயினுக்கு அது எளிதாகத்தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த அணி தடுமாறியது. கிரீஸுக்கு எதிரான முதல் போட்டி டிரா. ஜார்ஜியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் ஸ்டாப்பேஜ் டைமில் தான் வெற்றிக்கான கோலை அடித்தது. ஸ்வீடனுக்கு எதிரானன் நான்காவது போட்டியில் தோல்வி! முதல் நான்கு போட்டிகளில் 7 புள்ளிகள் மட்டுமே பெற்றிருந்தது ஸ்பெயின். ஒருவழியாக அடுத்த 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றது. ஸ்வீடன் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் வெற்றி அவசியம் என்ற நிலையில் இருந்தது அந்த அணி. இல்லையெனில் உலகக் கோப்பைக்கான நேரடி வாய்ப்பை இழந்திருக்கும். அந்தப் போட்டியிலும் கூட 86-வது நிமிடத்தில் தான் வெற்றிக்கான கோலை அடித்தது அந்த அணி.

பயிற்சியாளர்:

லூயிஸ் என்ரீக்கே தலைமையில் ஸ்பெயின் அணி பங்கேற்கும் இரண்டாவது தொடர் இது. 2020 யூரோ தொடரில் அணியை அறிவித்தபோதே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார் அவர். 26 வீரர்கள் தேர்வு செய்யபடலாம் என்றிருந்தபோது வெறும் 24 வீரர்களை மட்டுமே தேர்வு செய்தார். செர்ஜியோ ரமோஸ் போன்ற முன்னணி வீரர்கள் சிலரை அணியில் தேர்வு செய்யாமல் விட்டார். தன் கட்டுக்குள் அணியை வைத்திருக்க வேண்டும் என்பதற்காக பல அதிரடி முடிவுகள் எடுத்தார் என்ரீக்கே. அது பெரும் விமர்சனங்களை சந்தித்தது. இருந்தாலும், அந்தத் தொடரில் ஸ்பெய்னை அரையிறுதி வரை அழைத்துச் சென்றார் அவர். அதில் கூட இத்தாலிக்கு எதிராக பெனால்டி ஷூட் அவுட்டில் தான் அந்த அணி தோற்றது. இந்த முறை கூட 50 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்தபோதே முன்னணி கோல்கீப்பர் டேவிட் டி கா-வை தேர்வு செய்யாமல் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தினார். இருந்தாலும், இளம் வீரர்கள் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கை அணியின் மாற்றத்தில் பெரும் அங்கம் வகித்திருக்கிறது. இளமையையும், அனுபவத்தையும் சரியாகப் பயன்படுத்துவதில் அவர் கெட்டிக்காரர்.

பலம்:

ஸ்பெயின் அணியின் நடுகளம் போல், எந்த அணிக்கும் உலகத்தர வீரர்கள் நிறைந்திருக்கவில்லை. செர்ஜியோ பொஸ்கிட்ஸ், கோகே, தியாகோ அல்கன்டாரா, ஃபேபியன் ரூயிஸ், கார்லோஸ் சோலர்... இந்தப் பட்டியலே நீண்டு கொண்டிருக்கும் போது அவர்களுக்கே சவால் விடும் வகையில் பெட்ரி, காவி என 'கோல்டன் பாய்ஸ்' வேறு என்ட்ரி கொடுக்கிறார்கள். ஸ்பெயின் அணியின் ஆட்ட அணுகுமுறை எப்போதுமே அதன் நடுகளத்தை மையப் படுத்தியே இருந்திருக்கிறது. தன் ஆட்டத்தை அரங்கேற்ற என்ரீக்கேவுக்கு அட்டகாசமான நடுகளம் அமைந்திருக்கிறது.

பலவீனம்:

ஸ்பெயின் அணி உலகக் கோப்பையை வென்றபோது டேவிட் வியா, ஃபெர்னாண்டோ டாரஸ் போன்ற ஒரு அட்டகாசமான கோல் ஸ்கோரர்கள் இருந்தார்கள். பல போட்டிகளில் அந்த அணி ஒரு கோல் மட்டுமே அடித்திருந்தாலும், அணிக்குத் தேவையான நேரத்தில் அவர்கள் உருவாக்கும் வாய்ப்புகளை சரியாக கோலாக்கினார்கள். ஆனால் இப்போது அப்படியான வீரர்கள் ஸ்பெயின் அணியில் இல்லை. கடந்த சில ஆண்டுகளாகவே நல்ல ஸ்டிரைக்கர்கள் இல்லாமல் அந்த அணி தடுமாறுகிறது. அல்வாரோ மொராடா மட்டுமே அந்த அணியின் நம்பிக்கையாக இருக்கிறார். ஆனால் அவரும் வாய்ப்புகளை கோலாக்குவதை விட தவறவிடுவதற்குத்தான் பெயர் போனவர்.

நம்பிக்கை:

கோல்கள் அடிக்க அதிக வீரர்கள் இல்லாத நிலையில், தடுப்பாட்டத்தில் ஸ்பெயின் திடமாக இருக்கவேண்டும். 2010 போல் கோல்களே விடாமல் அரண் அமைக்க வேண்டும். அனுபவம் குறைந்த வீரர்கள் ஆடப்போகும் அந்த டிஃபன்ஸில் செர்ஜியோ ரமோஸின் அனுபவம் பெரும் உதவியாக இருக்கும். தங்கள் டிஃபன்ஸை அவர் எப்படி வழிநடத்தப்போகிறார் என்பது ஸ்பெய்னின் முன்னேற்றத்தில் முக்கிய அங்கம் வகிக்கும்.

வாய்ப்பு:

ஸ்பெயின் அணிக்கு குரூப் பிரிவே மிகவும் கடினமாக அமைந்திருக்கிறது. ஜெர்மனி அந்தப் பிரிவில் இருக்கிறது. ஜப்பானையும் குறைத்து மதிப்பிட முடியாது. அதனால் கொஞ்சம் பிசகினாலும் குரூப் சுற்றோடு வெளியெற வேண்டிய நிலை ஏற்படும். முதல் நாக் அவுட் ரவுண்டில் பெல்ஜியம் அல்லது குரோஷியா ஸ்பெயினுக்காக காத்திருக்கும். அதனால் அதுவும் எளிதாக இருக்கப் போவதில்லை. காலிறுதிக்குள் நுழைவது இம்முறையும் கடினமாகவே இருக்கப் போகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com