ரெய்னாவின் வெற்றிடத்தை நிரப்புவாரா முரளி விஜய்?
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் இருந்து சுரேஷ் ரெய்னா விலகியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அவரது வெற்றிடத்தை தமிழக வீரர் முரளி விஜய் நிரப்புவார் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
ஐபிஎல்-ன் ஆரம்ப கால சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆஸ்தான தொடக்க ஆட்டக்காரராஜ ஜொலித்தவர் முரளி விஜய். 2009 முதல் 2013 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 சீசன்களில் சென்னை அணிக்கு விளையாடிய முரளி விஜய் அவற்றில் 2 சதங்களையும் விளாசியுள்ளார். குறிப்பாக ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஒரு போட்டியில் அவர் 56 பந்துகளில் 127 ரன்களை அடித்து நொறுக்கியது இன்று வரை பசுமரத்தாணி போல் ரசிகர்களின் மனதில் பதிந்துள்ளது.
2011 சீசனில் சராசரியான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், இறுதிப் போட்டியில் 52 பந்துகளில் 95 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார், முரளி விஜய். 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு சீசன்களில் வளமையான ஆட்டத்தை வெளிப்படுத்தாததால் அவரை அணியிலிருந்து விடுவித்தது, சிஎஸ்கே நிர்வாகம். அதன் பின்னர் 2014 இல் டெல்லி அணிக்கும், 2015,16 ஆம் ஆண்டு சீசன்களில் பஞ்சாப் அணிக்கும் விஜய் விளையாடினார். அந்த அணிக்கு தலைமையேற்றும் வழிநடத்தியுள்ளார், விஜய்.
2017 ஐபிஎல் தொடரில் விஜய் விளையாடவில்லை. அதன் பின் 2018 ஆம் ஆண்டு சென்னை அணிக்காக மீண்டும் ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் கடந்த 2 சீசன்களில் மொத்தம் 3 போட்டிகளில் மட்டுமே அவருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டன. ஏனெனில் தொடக்க வீரருக்கான இடங்களை வாட்சன், டூ பிளசி ஆகிய இருவரும் நங்கூரம் பாய்ச்சியது போன்று பிடித்து அமர்ந்திருந்தனர். இந்நிலையில் சிஎஸ்கேவின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா நடப்பாண்டு தொடரில் இருந்து விலகியது முரளி விஜயின் வாய்ப்புக்கான கதவுகளை மீண்டும் திறந்துள்ளது.
ரெய்னாவின் வெற்றிடத்தை அனுபவமிக்க முரளி விஜய் நிச்சயம் பூர்த்தி செய்வார் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருதுகின்றனர். அதிரடி மன்னன் வாட்சனுடன், முரளி விஜய்யை தொடக்க வீரராக களமிறக்கப்படலாம் என முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். தனது திறமையை நிரூபிக்க நீண்ட காலமாக காத்திருக்கும் விஜய், இந்தாண்டு தொடரில் மீண்டும் தடம் பதிப்பார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.