வெற்றிக் கோப்பையுடன் விடை பெறுவாரா மெஸ்ஸி? - எகிறும் எதிர்பார்ப்புகள்

வெற்றிக் கோப்பையுடன் விடை பெறுவாரா மெஸ்ஸி? - எகிறும் எதிர்பார்ப்புகள்
வெற்றிக் கோப்பையுடன் விடை பெறுவாரா மெஸ்ஸி? - எகிறும் எதிர்பார்ப்புகள்

அர்ஜென்டினா அணிக்காக உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்தவர்கள் பட்டியலில் லயோனல் மெஸ்ஸி முதலிடம் பிடித்திருக்கிறார்.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லுசைஸ் ஐகானிக் ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த முதலாவது அரையிறுதியில் அர்ஜென்டினா அணி, குரோஷியாவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு அசத்தலாக முன்னேறியது.

இந்த ஆட்டத்தின் 34-வது நிமிடத்தில் 'பெனால்டி' வாய்ப்பு கிடைக்க, அதை கச்சிதமாக பயன்படுத்திக்கொண்ட அர்ஜென்டினா அணியின் கேப்டனும், நட்சத்திர வீரருமான லயோனல் மெஸ்ஸி துல்லியமாக முதல் கோல் அடித்தார். இந்த கோல் மூலம் ஃபிஃபா உலகக் கோப்பையில் அர்ஜென்டினா அணிக்காக அதிக கோல் (11 கோல்கள்) அடித்த வீரர் என்ற சாதனையை படைத்தார் மெஸ்ஸி. இந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினா 12 கோல்கள் அடித்துள்ளது. இதில் மெஸ்ஸி 5 கோல்கள் அடித்துள்ளார். 3 கோல் போட உதவியிருக்கிறார்.  

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் உலகக் கோப்பையை லயோனல் மெஸ்ஸி வெல்ல வேண்டும் என்று கோடிக்கணக்கான ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். ஏனெனில் 35 வயதாகும் மெஸ்ஸிக்கு இதுதான் கடைசி உலகக் கோப்பை. இதை அவரே தொடருக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டார். கால்பந்து உலகில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ள மெஸ்ஸி இதுவரை உலகக் கோப்பையை மட்டும் இன்னும் வெல்லவில்லை. இதனால் இந்த உலகக் கோப்பையை அர்ஜென்டினா அணி வென்று அதை மெஸ்ஸி கையில் ஏந்துவதைப் பார்க்க உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.  

1978, 1986 உலகக் கோப்பை வெற்றிகளைத் தொடர்ந்து 3-வது வெற்றியை ருசிப்பதற்காக இறுதிச் சுற்றுக்குள் அர்ஜென்டினா நுழைந்துள்ளது. 36 ஆண்டுகால உலகக்கோப்பை கனவை நனவாக்கும் முயற்சியில்  மெஸ்ஸி தீவிரமாக இருக்கிறார்.  தனது மேஜிக் கோல்களால் கோப்பையை வென்று புதிய வரலாறை மெஸ்ஸி படைப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

மெஸ்ஸி விளையாடுகிறார் என்றால் அவரை எதிர்கொள்ள எதிரணிகள் தனி வியூகம் வகுப்பது வழக்கம். ஏனெனில் அவரது கால்களுக்குப் பந்து சென்று விட்டால், அந்த பந்தை மீட்டெடுப்பது என்பது எதிரணி வீரர்களுக்கு எளிதான விஷயம் அல்ல. மெஸ்ஸி தனது கால்களால் நிகழ்த்தும் அந்த மேஜிக் தருணத்தை  காண்பதற்காகவே அவருடைய ரசிகர்கள் ஒவ்வொரு போட்டியிலும்  கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

மெஸ்ஸி 2-வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். 2014-ல் ஜெர்மனியிடம் தோல்வியடைந்த இறுதி ஆட்டத்திலும் மெஸ்ஸி பங்கேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. டிச 15 அதிகாலை 12.30 மணியளவில் நடைபெறும் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ், முதன்முதலாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ள மொராக்கோ அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

தவற விடாதீர்: கத்தார் கால்பந்து திருவிழா: மாஸ் காட்டிய மெஸ்ஸி... உலகக்கோப்பை தொடரில் நிகழ்த்திய சாதனை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com