இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் மழைபெய்யுமா? போட்டி நிறுத்தப்படுமா? நிபுணரின் கணிப்பு என்ன.?

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் மழைபெய்யுமா? போட்டி நிறுத்தப்படுமா? நிபுணரின் கணிப்பு என்ன.?
இந்தியா-பாகிஸ்தான் ஆட்டத்தில் மழைபெய்யுமா? போட்டி நிறுத்தப்படுமா? நிபுணரின் கணிப்பு என்ன.?

16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 16 அணிகளில் இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறி உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

சூப்பர் 12 சுற்றில் நேரடியாக களம் காணும் அணிகள் போட்டிக்கு தயாராகும் பொருட்டு தலா 2 பயிற்சி ஆட்டங்களுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஏற்பாடு செய்தது. இதில் பிரிஸ்பேனில் நடைபெற்ற முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. இந்த நிலையில் பிரிஸ்பேனில் உள்ள கேபா மைதானத்தில் நேற்று 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுவதாக திட்டமிடப்பட்டு இருந்தது. ஒரு ஓவர் கூட வீச முடியாத அளவுக்கு தொடர்ந்து அங்கு மழை பெய்ததால் 2வது பயிற்சி ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதேபோல ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகி இருப்பதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அக்டோபர் 23 (ஞாயிற்றுக்கிழமை) அன்று ஆஸ்திரேலிய நேரப்படி இரவு 7 மணிக்கு ஆட்டம் துவங்கப்பட திட்டமிடப்பட்டுள்ள நிலையில், அன்றைய தினம் மெல்போர்னில் 90 சதவீதம் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 10 முதல் 25 மிமீ வரை மழை பொழியக்கூடும் எனக் கூறப்படுவதால் அனல் பறக்கும் ஆட்டத்தை காணவிருந்த ரசிகர்களுக்கு இது ஒரு கவலையளிக்கும் செய்தியாகவே மாறியுள்ளது.

இது குறித்து புதிய தலைமுறைக்கு பிரத்யேக பேட்டியளித்த தனியார் வானிலை மைய நிபுணர் வெதர்மேன் பிரதீப் ஜான், “மெல்போர்னைப் பொறுத்தவரைக்கும் அடுத்த இரு நாட்கள் கழித்து மழை துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இப்போது வரைக்கும் அங்கு பெரிய அளவுக்கு மழை இல்லை. ஆனால் வெள்ளிக்கிழமையில் இருந்தே மழை துவங்குவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை போட்டி துவங்கும் முன்னரே மழை துவங்குவதற்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. எனவே போட்டியின்போது மழை குறுக்கிடலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேகமூட்டத்துடன் ஈரப்பதம் அதிகம் இருக்கும் சூழல் தான் அன்றைய தினம் நிலவும் என்று கணிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

ஒரு டி20 ஆட்டத்தில் முடிவு எட்டப்பட்ட குறைந்தது 5 ஓவர்களாவது வீசப்பட வேண்டும் என்பது விதி. குரூப் மற்றும் சூப்பர் 12 ஆட்டங்களில் கூடுதல் நாள் கிடையாது. அரையிறுதி, இறுதிச்சுற்று ஆட்டங்களுக்கே அந்த கூடுதல் நாள் வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்து விளையாட இயலாத சூழல் ஏற்பட்டால் போட்டி முழுமையாக கைவிடப்பட்டு இரு அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்படப் போகிறதா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com