டி20 உலககோப்பையை வெல்லுமா இந்தியா.!? அறிவிக்கப்பட்ட அணி தேறுமா தேறாதா? - ஒரு பார்வை

டி20 உலககோப்பையை வெல்லுமா இந்தியா.!? அறிவிக்கப்பட்ட அணி தேறுமா தேறாதா? - ஒரு பார்வை
டி20 உலககோப்பையை வெல்லுமா இந்தியா.!? அறிவிக்கப்பட்ட அணி தேறுமா தேறாதா? - ஒரு பார்வை

பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள், ஆல்ரவுண்டர்கள் என அனைத்து கட்டங்களையும் டிக் செய்திருக்கும் இந்திய அணியால் ஏன் ஆசியகோப்பையை வெல்ல முடியவில்லை.? ஆசியகோப்பையையே வெல்ல முடியாத இந்தியாவால் உலககோப்பையை வெல்ல முடியுமா.?

கடந்த 2021 டி20 உலககோப்பையை வெல்லும் வாய்ப்பு இந்திய அணிக்கு தான் அதிகமாக இருக்கிறது என்று அனைவராலும் எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில், அரையிறுதிக்கு கூட தகுதி பெறாமல் பரம எதிரியான பாகிஸ்தான் அணியுடன் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்து லீக் சுற்றோடு வெளியேறியது இந்திய அணி. இந்நிலையில் டிராவிட் தலைமை பயிற்சியாளராய் பொறுப்பேற்ற பிறகு சிறந்த அணியை தயார் செய்வதாக கூறி பவுலிங், பேட்டிங் என்றில்லாமல் கேப்டன்சியையும் மாற்றி மாற்றி கிரிக்கெட்டில் ஒரு கால்பந்து ஆட்டத்தையே ஆடிகொண்டிருந்தார் ராகுல் டிராவிட்.

மேலும் உலககோப்பைக்கு தேவையான 90% சதவீத அணியை தேர்வு செய்துவிட்டோம் என்று கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்த நிலையில், இந்திய அணி ஆசியகோப்பையில் பங்கேற்று ஆடியது. ஆசியகோப்பையை இந்திய அணி வென்று அதே உத்வேகத்துடன் உலககோப்பைக்குள் நுழையும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக இறுதி போட்டிக்கு கூட முன்னேறாமல் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்து வெளியேறியது.

இந்நிலையில் தற்போது உலககோப்பைக்கான 19 வீரர்கள் கொண்ட இந்திய அணியை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அணிக்குள் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் ஹர்சல் பட்டேல் இருவரும் திரும்பியுள்ளனர். ஆனால் ஆசியகோப்பையில் விளையாடிய இந்திய அணியிலிருந்து எந்தவிதமான பெரிய மாற்றமும் இல்லாமல், அதே அணி தான் உலககோப்பைக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த அணி உலககோப்பையை வெல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் இந்திய அணி வெல்ல என்ன செய்யவேண்டும் என்று பார்க்க வேண்டிய இடத்தில் இருக்கிறது.

இந்திய அணியின் பலம் : இந்திய அணியின் பலமாக இருப்பது தற்போது பழைய பார்மிற்கு திரும்பியிருக்கும் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா மற்றும் பும்ரா மூன்று வீரர்கள் தான்.

புவனேஷ்வர் குமார்- பவர்பிளே எனப்படும் முதல் 6 ஓவர்களில் ஸ்விங்க் செய்யும் விதத்தில், புவனேஷ்வர் குமார் சிறப்பாக பந்துவீசுவதால் ஆஸ்திரேலியா போன்ற பந்துவீச்சிற்கு சாதகமான ஆடுகளங்களில் நல்ல தொடக்கத்தை இந்தியாவிற்கு ஏற்படுத்தி கொடுக்க முடியும். மேலும் டெத் ஓவர்களில் வீசுவதற்காகவே ஹர்சல் பட்டேல் இருப்பதால் புவனேஷ்வர் குமாருக்கு முதலிலேயே ஓவர்களை முடித்துவிட்டால் இந்தியா ஆசியகோப்பையில் செய்த தவறை சரிசெய்துகொள்ள முடியும்.

ஹர்சல் பட்டேல் - ஆஸ்திரேலியாவின் ஆடுகளங்கள் பெரும்பாலனவை பெரிய ஆடுகளங்கள் என்பதால் டெத் ஓவர்களில் ஹர்சல் பட்டேலால் ரன்களை அதிகளவு விட்டுகொடுக்காமல் சிறப்பாக பந்துவீச முடியும். மற்றும் நல்ல பார்மில் இருக்கும் அவர் இந்திய அணியின் பந்துவீச்சுக்கு மேலும் பலம் சேர்க்க முடியும்.

இந்திய அணியின் பலவீனம் : இந்திய அணிக்கு எப்போதைக்குமான பெரிய கவலையாக இருந்து வருவது மிடில் ஆர்டர் பேட்டிங் தான். யுவராஜ் மற்றும் தோனி இருவரும் போனதில் இருந்தே இன்னும் அந்த இடம் கவலைக்கிடமாகவே இருந்து வருகிறது.

நல்ல பார்மில் இருந்த சூரியகுமார் ஆசியகோப்பையில் சொதப்பியதால் இன்னும் அந்த இடம் கவனிக்கப்பட வேண்டிய இடமாகவும், அணியை பலம் சேர்க்க வேண்டிய இடமாகவும் இருக்கிறது. சூரியகுமார் யாதவ், ரிஷப் பண்ட் மற்றும் தீபக் ஹூடா சொதப்புவதால் ஹர்திக் பாண்டியாவிற்கு அழுத்தம் அதிகமாகிறது. அவரும் அவுட் ஆகிவிட்டால் இந்திய அணியின் நிலைமை கவலைக்கிடம் தான்.

ஆசியகோப்பையில் இந்தியாவின் தோல்விக்கு பவுலிங் மற்றும் பீல்டிங் தான் கூறப்பட்டாலும், தோல்விக்கு பெரிய காரணமாக இருந்தது மிடில் ஆர்டர் சரியாக விளையாடாமல் போனது தான்.

ரோகித் சர்மாவிற்கு இருக்கும் சவால் : அணியில் ரவீந்திர ஜடேஜா இல்லாமல் போனது தான் தினேஷ் கார்த்திக் அணியில் விளையாட முடியாமல் போவதற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.

அணியில் ஒரு இடது கை பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட இல்லாமல் போவது இந்திய அணிக்கு பெரிய பாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இந்நிலையில் அணியில் ரிஷப் பண்ட் இல்லாமல் தினேஷ் கார்த்திக்கை எடுத்து செல்வது கடினமான ஒன்றாக இருக்கும். இதனால் கேப்டன் ரோகித் சர்மா ஒரு பெரிய முடிவை எடுக்க வேண்டிய இக்கட்டான இடத்தில் இருக்கிறார்.

தொடர்ந்து ரிஷப் பண்ட் சொதப்பி வந்தால் இந்திய அணியின் நிலைமை கவலைக்குள்ளாகி விடும். ரிஷப் பண்ட் ஆடவில்லை என்றால் ஒரு இடது கை பேட்ஸ்மேன் கூட இல்லாமல் இந்தியா எப்படி சமாளிக்கும் என்பது கேள்விக்குறி.

அக்சர் பட்டேல் அணிக்குள் எடுக்கப்பட்டால் ரிஷப் பண்டிற்கு பதிலாக தினேஷ் கார்த்திக் களமிறங்க வாய்ப்பு இருக்கிறது. இல்லையெனில் தீபக் ஹூடா பவுலிங் போடாத பட்சத்தில் அவரை வெளியில் வைத்துவிட்டு ரிஷப் பண்ட் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரையும் ஆட வைக்கலாம். எப்படி பார்த்தாலும் ஜடேஜா இருந்த போது இந்திய அணிக்கு 6 பவுலிங் ஆப்சன் மற்றும் இடது கை பேட்ஸ்மேன்கள் பிரச்சனை இல்லாமல் இருந்தது. தற்போது அவர் இல்லாததால் இந்திய அணிக்கு எப்படி ஆடும் 11வை தேர்வு செய்வதென்பது பெரும் சவாலாகவே இருக்கும்.

இந்நிலையில் இருக்கும் சவால்கள் மற்றும் பிரச்சனைகளை சரிசெய்து இந்தியா உலககோப்பையில் சிறப்பாக செயல்பட்டு 2022ஆம் ஆண்டின் டி20 உலககோப்பையை வென்று வருமா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

-வேங்கையன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com