தேராத தினேஷ் கார்த்திக் ! தேர்வாக இருக்கும் ரிஷப் பந்த்
இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 2 வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்தது. முதல் போட்டியில் கேப்டன் விராட் கோலி சதம் அடித்தது சற்றே ஆறுதலாக இருந்தது.
ஆனால், லாட்ஸ் போட்டியில் ஒருவர் கூட அரைசதம் அடிக்கவில்லை. கோலி உட்பட அனைத்து வீரர்களும் சொதப்பினார்கள். முதல் இன்னிங்சில் 107, 2வது இன்னிங்சில் 130 ரன்கள் மட்டுமே எடுத்தனர். இரண்டு இன்னிங்சில் அஸ்வின்தான் (29, 33) அதிக ஸ்கோர் அடித்தார். இதனால், இந்திய வீரர்கள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் லெவனில் பல அதிரடியான மாற்றங்களை மேற்கொள்ள அணியின் நிர்வாகம் திட்டமிடப்பட்டுள்ளது.
இங்கிலாந்து சுற்றுப் பயணத்துக்கு இந்திய டெஸ்ட் அணியில் இரண்டு விக்கெட் கீப்பர்கள் சேர்க்கப்பட்டனர். அதாவது தினேஷ் கார்த்திக்கும், ரிஷப் பந்த்தும் அணியில் இணைந்தனர். ஆனால் அனுபவத்தின் அடிப்படையில் ஆடும் லெவனில் தினேஷ் கார்த்திக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. ஆனால் நடந்த முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான்கு இன்னிங்ஸிலும் தினேஷ் கார்த்திக் 21 ரன்களே எடுத்துள்ளார்.
அதில் இரண்டு டக் அவுட்டுகளும் அடங்கும். பல ஆண்டுகளுக்கு பின்பு அணியில் கஷ்டப்பட்டு இடம் பிடித்த தினேஷ் கார்த்திக் தனக்கு வழங்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு இளைஞரான ரிஷப் பந்த்க்கு வாய்ப்பு அளிக்க இந்திய அணி நிர்வாகம் முடிவு மேற்கொண்டுள்ளது.
இந்திய ஏ அணிக்காக இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய அணிகளுக்கு இடையே விளையாடிய ரிஷப் பந்த் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். மேலும், எசக்ஸ் அணியுடனான பயிற்சி ஆட்டத்தில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார் ரிஷப் பந்த். மிகப்பிரமாதமான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியும், அனுபவம் காரணமாக தினேஷ் கார்த்திக் ஆடும் லெவனில் சேர்க்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.