ரஹானே செய்த தரமான சம்பவங்கள்! இவருக்கு ஏன் டீம்ல தொடர்ந்து வாய்ப்பே கிடைக்கல?

இந்திய அணியின் நட்சத்திர வீரராக ஜொலித்த அஜிங்க்யா ரஹானே, தற்போது பிசிசிஐ-ன் வருடாந்திர ஒப்பந்தத்தில் கூட இல்லாமல் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில், ஐபிஎல்லில் ஒரு அற்புதமான ஆட்டத்தை ஆடி அனைவரையும் ஆட்டம் காண வைத்துள்ளார்.
Rahane
RahaneTwitter

எல்லோரையும் திரும்பி பார்க்க வைத்த ரஹானேவின் அதிரடி!

சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் போட்டியில், யாரும் எதிர்பாராத நேரத்தில் ஒரு அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஜிங்க்யா ரஹானே, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அன்றைய நாளில் அவருடைய ஆட்டமானது ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல், முன்னாள் வீரர்கள் பலருக்கும் கூட சர்ப்ரைஸ்ஸாக தான் அமைந்தது. அதற்கு எடுத்துக்காட்டாக சொல்லவேண்டும் என்றால், கமண்ட்ரி செய்து கொண்டிருந்த இயன் பிஷப்பின் வார்த்தைகளை தான் சொல்லவேண்டும்.

ரஹானேவின் அதிரடி ஆட்டத்திற்கு பிறகு கமண்டிரியில் பேசிக்கொண்டிருந்த பிஷப், “ ஓ, இதை யாரும் எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். இந்த வருட ஐபிஎல்லின் அதிவேக அரைசதத்தை அஜிங்யா ரஹானே அடிப்பார் என்று நினைத்திருக்க மாட்டார்கள்” என கூறியிருந்தார். அவரின் மன ஓட்டங்கள் தான், ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் மனதிலும் இருந்தது.

ஆனால், அவையெல்லாம், அஜிங்யா ரஹானே இந்திய அணிக்காகவும், ஐபில் போட்டிகளிலும் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டிருந்தார் என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை என்பதையே வெளிக்காட்டியது. ஒரு கிளாஸ்ஸான பேட்ஸ்மேன் எல்லோர் மனதிற்குள்ளும் சென்று சேர, இன்னும் எவ்வளவு திறமைகளை தான் வெளிக்காட்டவேண்டும் என்று எண்ணத்தோன்றியது.

இந்தியாவிற்காக முதல் டி20 போட்டியிலேயே அரைசதம் அடித்து கலக்கிய ரஹானே!

இங்கிலாந்தின் சொந்த மண்ணான மான்செஸ்டரில் நடந்த போட்டியில், இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் டி20 போட்டியை ஆடினார் ரஹானே. அந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், கிரவுண்டின் அனைத்து பக்கத்திற்கும் பவுண்டரிகளை விரட்டினார். ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுபுறம் அதிரடி காட்டிய ரஹானே, 29 பந்துகளில் 150+ ஸ்டிரைக்ரேட்டில் தனது முதல் போட்டியிலேயே அரைசதத்தை பதிவு செய்து அசத்தியிருந்தார்.

Rahane
RahaneTwitter

ரஹானேவுக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கவில்லை?

அதற்கு பிறகான பல்வேறு காரணங்களால், ரஹானே அணிக்குள் வருவதும் செல்வதுமாய் இருந்தார். அவர் ஒருநாள் போட்டிகளில் தொடர்ந்து 4 அரைசதங்களை அடித்திருந்த போதிலும், டி20 அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், அவர் தன்னுடைய வேலையை சிறப்பாகவே செய்துகொண்டிருந்தார். டி20 அணியில் விடுவிக்கப்பட்டது குறித்து பேசியிருந்த ரஹானே, “ நான் தேர்வுக்குழுவின் முடிவை மதிக்கிறேன். எனக்கான வாய்ப்பு கிடைக்கும் போது, நான் நன்றாக விளையாட முயற்சிக்கிறேன்” என்று முதிர்ச்சியாக பேசியிருந்தார்.

ஐபிஎல் போட்டிகளில் 2 சதங்கள், 29 அரைசதங்கள், 4000+ ரன்கள்!

ஐபிஎல் தான் இந்திய அணிக்குள் நுழைய அளவுகோல் என்றால், அதில் அஜிங்க்யா ரஹானே டாப்பில் இருக்கிறார். ராஜஸ்தான் ராயல் அணியில் ஓப்பனராக களமிறங்கி விளையாடிய அஜிங்யா ரஹானே, டெல்லி அணிக்கு எதிராகவும், ஆர்சிபி அணிக்கு எதிராகவும் 2 ஐபிஎல் சதங்களை பதிவு செய்திருக்கிறார். மேலும் 29 அரைசதங்களை அடித்திருக்கும அவர், 30+ சராசரியுடன் 120+ ஸ்டிரைக் ரேட்டில் இருக்கிறார்.

Rahane
RahaneTwitter

டி வில்லியர்ஸ், க்றிஸ் கெய்ல் போன்று நின்ற இடத்திலிருந்தே சிக்சருக்கு அனுப்பும் வீரர் இல்லை என்றாலும், பியூர் டைமிங்கில் விளையாடக்கூடிய வீரர் ரஹானே. அவருடைய டைமிங்கில் கொஞ்சம் இண்டண்ட்டை சேர்த்து விட்டால் போதும், மனுசன் களத்தில் பட்டையை கிளப்ப ஆரம்பித்துவிடுவார். அப்படி ஒரு இண்டண்ட்டை தான் சிஎஸ்கே அணியில் தோனி அவருக்கு ஏற்படுத்தியிருந்தார். அதனால் தான் அவரால் அப்படி ஒரு அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடிந்தது.

ஒரு இந்திய வீரரின் சிறந்த வெளிநாட்டு சதங்களில் ஒன்றை நான் பார்த்தேன் - ரவி சாஸ்திரி

டெஸ்ட் கிரிக்கெட்டில் எந்த இந்திய வீரரும் செய்யாத சில விசயங்களை எல்லாம் ரஹானே செய்திருக்கிறார். ஃபாஸ்ட் பவுலிங்கிற்கு எதிராக மற்றவீரர்களின் கால்கள் தாளம் போடும் போட்டியில் எல்லாம், அஜிங்கியா ரஹானே சுலபமாக ஆடிக்கொண்டிருப்பார். அந்த ஆட்டம் இவர் மட்டும் தனியாக ஒரு ஆடுகளத்தில் ஆடுவதை போல் இருக்கும். அப்படி ஒரு இண்டண்ட் மற்றும் டைமிங் அவருடைய பேட்டிங்கில் இருக்கும். அதற்கு எடுத்துக்காட்டாக ஆஸ்திரேலியாவில் இந்தியா 36-க்கு ஆல் அவுட்டான பிறகு, அவர் வெளிக்கொண்டு வந்த சதத்தை சொல்லலாம்.

Rahane
RahanePTI

ஆஸ்திரேலியாவில் அவர் அடித்த சதம் குறித்து பேசியிருக்கும் ரவி சாஸ்திரி, “ நாங்கள் 36 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி இருந்தோம், அந்த நிலைமையில் நாங்கள் நிச்சயம் மற்ற அனைத்து போட்டிகளிலும் தோல்வியை தான் சந்திப்போம் என்று எல்லோரும் நினைத்திருந்தார்கள். ஆனால் அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் ரஹானே அற்புதமான ஒரு சதத்தை வெளிக்கொண்டு வந்தார். ஒரு இந்திய வீரரின் சிறந்த வெளிநாட்டு சதங்களில் ஒன்றை நான் அப்போது பார்த்தேன்” என்று புகழ்ந்து கூறியுள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்சிப்பில் ரஹானே!

ரஹானேவின் சிறப்பான பேட்டிங்கை பார்த்து மிரண்டிருக்கும் பிசிசிஐ, இங்கிலாந்தில் நடைபெறவிருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டிக்கு எடுத்து செல்லும் எண்ணத்தில் இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. கிடைத்திருக்கும் தகவல்களின் படி, எப்போதும் ரஹானே வெளிநாட்டு ஆடுகளங்களில் சிறப்பாக செயல்பட்டிருப்பதை கருத்தில் கொண்டும், மிடில் ஆர்டரில் ஒரு அனுபவம் வாய்ந்த வீரர் தேவை என்பதை கருத்தில் கொண்டும், மீண்டும் ரஹானேவை அணிக்குள் சேர்க்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஹானே
ரஹானேடிவிட்டர்

ரஹானாவின் ஃபார்மை பார்த்து மிரண்டுபோன பிசிசிஐ!

இதற்கான முதற்காரணம் 2022-2023 ரஞ்சிக்கோப்பை தொடரில் ரஹானே 634 ரன்கள் குவித்தது தான். பார்மில் இல்லை என ஒப்பந்தத்தில் வெளியேற்றியிருக்கும் பிசிசிஐ, ரஞ்சிக்கோப்பை தொடரில் 7 ஆட்டங்களில் ஒரு சதம் மற்றும் இரட்டை சதம் விளாசி 58 சராசரியுடன் ரஹானே ஆடிய ஆட்டத்தை பார்த்து மிரண்டுள்ளது. இந்நிலையில், காயத்தால் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவருக்கு பதில் ரஹானேவை அணிக்குள் எடுத்துச்செல்லும் முனைப்பில் பிசிசிஐ இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com