அஸ்வின் மட்டும் தான் செய்வாரா? நாங்களும் செய்வோம்! லயன் சுழலில் சிக்கி தடுமாறும் இந்தியா!

அஸ்வின் மட்டும் தான் செய்வாரா? நாங்களும் செய்வோம்! லயன் சுழலில் சிக்கி தடுமாறும் இந்தியா!
அஸ்வின் மட்டும் தான் செய்வாரா? நாங்களும் செய்வோம்! லயன் சுழலில் சிக்கி தடுமாறும் இந்தியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நாதன் லயன் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது இந்திய அணி.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில் பங்குபெற்று விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளர்களின் தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் எளிதாகவே தோல்வியை தழுவியது ஆஸ்திரேலிய அணி. ஆஸ்திரேலியாவை இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, அந்த அணிக்கு எதிரான 3ஆவது மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது இந்திய அணி. இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் அஸ்வின் மற்றும் ஜடேஜா ஜோடி 15 விக்கெட்டுகளை கைப்பற்றி முதல் டெஸ்ட்டில் ஆதிக்கம் செலுத்தியது.

உலகின் நம்பர் 1, நம்பர் 2 பேட்டர்களை 3 பந்துகளில் வெளியேற்றிய அஸ்வின்!

இரண்டாவது டெஸ்ட் போட்டியை வெற்றிபெற்று பதிலடி கொடுக்கும் முயற்சியில் களமிறங்கியது ஆஸ்திரேலிய அணி. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் வார்னர் மற்றும் உஸ்மான் கவாஜா, நல்ல அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். 50 ரன்னிற்கு முதல் விக்கெட்டை இழந்தாலும் கவாஜாவின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா நல்ல நிலைமையில் தான் இருந்தது.

ஆனால் 19ஆவது ஓவரை வீச வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் நிதானமாக விளையாடிய லபுசனேவிடம் சின்னதாக மைண்ட் கேம் ஆடினார். நான் ஸ்டிரைக்கில் இருந்த லபுசனே பந்துவீசுவதற்கு முன்பே வெளியேறியதால் எச்சரிக்கை செய்யும் விதமாக பந்துவீச சென்று நிறுத்திவிட்டு திரும்ப வந்தார் அஸ்வின். அதை கவனித்த லபுசனே அஸ்வின் பந்துவீசும் போது ஸ்டம்பிற்கு அந்த பக்கமாகவே இருந்து ரன்னிற்கு சென்றார். பின்னர் 23ஆவது வீசிய அஸ்வின் லபுசனேவை எல்பிடபள்யூ ஆக்கி வெளியேற்றினார், ரிவியூ கேட்டுவிட்டு பார்த்துக்கொண்டிருந்த லபுசனே பேட்டை கோவமாக அடித்துக்கொண்டு வெளியேசென்றார். பின்னர் அடுத்து களத்திற்கு வந்த ஸ்டீவ் ஸ்மித்தை அடுத்த 2ஆவது பந்தில் வெளியேற்றி ஆஸ்திரேலியாவை நிலைகுலையச்செய்தார் ரவி அஸ்வின்.

விக்கெட் விழுந்தாலும் ரன் குவிப்பிற்காக அதிரடி காட்டிய கவாஜா, ஹேண்ட்ஸ்கோம்!

என்னதான் ஒருபுறம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபுறம் சுழற்பந்துவீச்சாளர்களை ஆதிக்கம் செலுத்த விடாமல் ஸ்வீப், ரிவர்ஸ் ஸ்வீப், அட்டாக்கிங்க் ஷாட் என ஆடி ரன்களை வேகமாக எடுத்துவரும் முயற்சியில் ஈடுபட்டார் கவாஜா. சதத்தை நோக்கி சென்று கொண்டிருந்த அவரை, ஒரு அபாரமான கேட்ச் மூலம் கேஎல் ராகுல் வெளியேற்ற. அடுத்து களத்திற்கு வந்த ஹேண்ட்ஸ்கோம் நிதானமாக விளையாடி ரன்குவிப்பில் ஈடுபட்டார். பாட் கம்மின்ஸ் மினி இன்னிங்ஸ் ஆட, இறுதியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த ஆஸ்திரேலியா 263 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ்கோம் 72 ரன்களும் எடுத்தனர்.

அஸ்வின் தான் செய்வாரா நானும் செய்வன் என ஒரே ஓவரில் ரோகித், புஜாராவை வெளியேற்றிய நாதன்!

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி முதல்நாள் முடிவில் விக்கெட்டை இழக்காமல் நிதானமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. ஆனால் 2ஆவது நாளையும் இந்தியாவை அப்படியே விளையாட நாதன் லயன் அனுமதிக்கவில்லை. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய நாதன், கே எல் ராகுலை 17 ரன்களில் வெளியேற்றினார். பின்னர் களமிறங்கிய புஜாராவை அதே ஓவரில் எல்பிடபள்யூ எடுப்பார் நாதன், அம்பயர் அவுட் கொடுக்காததால் ஆஸ்திரேலியா ரிவ்யூ செல்லாமல் இருந்தனர். ஆனால் பிறகு 3 ரெட் சிக்னலையும் பெற்றிருந்தது அந்த பந்து.

அவுட்டாகும் வாய்ப்பை தவிர்த்த புஜாரா தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் அதை பயன்படுத்திக் கொள்வார் என எதிர்பார்த்த நிலையில், 20ஆவது ஓவரை வீச வந்த நாதன், இந்த முறை கேப்டன் ரோகித் சர்மாவை போல்டாக்கி வெளியேற்றி அசத்தினார். பின்னர் களமிறங்கிய விராட் கோலி சிங்கிள் சென்றுவிட, 4ஆவது பந்தை எதிர்கொண்ட புஜாரா இந்த முறை லக் ஏதும் இல்லாமல் நாதன் சுழலில் சிக்கினார். அஸ்வின் 3 பந்துகளில் லபுசனே, ஸ்மித் இருவரையும் வெளியேற்றதை போன்றே நாதனும் ரோகித் மற்றும் புஜாராவை வெளியேற்றி இந்தியாவிற்கு பதிலடி கொடுத்தார்.

66-4 விக்கெட்டுகளில் களத்தில் நிற்கும் விராட் கோலி! சொந்த மைதானத்தில் இந்தியாவை மீட்பாரா?

54 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்தியா தடுமாற, களத்திற்கு வந்தார் ஸ்ரேயாஸ் ஐயர். விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் ஜோடி இந்தியாவை நல்ல டோட்டலுக்கு எடுத்து செல்லும் என்று எதிர்பார்த்த நிலையில், இன்னும் நீ போகலையா என்பது போல், மீண்டும் பந்துவீச வந்த நாதன் ஸ்ரேயாஸ் ஐயரை வெளியேற்றி அடிக்குமேல் அடி கொடுத்தார். 4 விக்கெட்டுகளை இழந்த நிலையில் 88 ரன்களுடன் ஆடிவருகிறது இந்திய அணி. விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா இருவரும் களத்தில் இருக்கின்றனர். விராட் கோலி கிட்டத்தட்ட 6 வருடங்களுக்கு பிறகு தன்னுடைய சொந்த மைதானத்தில் விளையாடும் நிலையில், கோலியிடம் இருந்து ஒரு சிறப்பான ஆட்டத்தை ரசிகர்கள் எதிர்நோக்கி உள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com