விளையாட்டு
ஒய்டா? நாட் ஒய்டா? தோனி விட்ட லுக்... அம்பயரே கன்பீயூஸ் ஆயிட்டாரு...!
ஒய்டா? நாட் ஒய்டா? தோனி விட்ட லுக்... அம்பயரே கன்பீயூஸ் ஆயிட்டாரு...!
அம்பயர் ஒய்டு காட்டுவதற்காக கையை விரிக்க முயன்றபோது தோனி கோபமாக முறைத்துப் பார்க்க, நாட் ஒய்டாக அறிவித்தார்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடந்த 29-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றிபெற்றது.
முன்னதாக இப்போட்டியின் 19-வது ஓவரை சி.எஸ்.கே. வீரர் ஷர்துல் தாக்கூர் வீசினார். அந்த ஓவரின் 2-வது பந்தை ரஷித் கான் சந்தித்தார். அப்போது பந்தை ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே அகலமாக வீசினார் தாக்கூர். அந்த பந்து ஒய்டு என்பதுபோல தெரிந்தது. அதற்கு முன்பாக ஒரு பந்தையும் அவ்வாறுதான் அவர் வீசி அம்பயர் ஒய்டு கொடுத்திருந்தார். இதனையடுத்து இந்த பந்துக்கும் அம்பயர் திரும்பி கையை அகலமாக விரித்து ஒய்டு என சொல்வதற்கு முயற்சி செய்தார்.
அப்போது கடும்கோபம் கொண்ட தோனி, முறைத்தபடியே அம்பயரை பார்த்து ஏதேதோ சொன்னார். இதைப்பார்த்த அம்பயர் ஒரு நொடி யோசித்து, பின்னர் கையை அப்படியே கீழே இறக்கி திரும்பிவிட்டார். இதை வெளியே உட்கார்ந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்த ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கோபமாகிவிட்டார். என்ன நடக்கிறது என்று கையை அகற்றி தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.
ஒய்டு வழங்கப்படாததால் ஹைதராபாத் அணிக்கு 1 ரன் கிடைக்காமல் போனது. இது ஹைதராபாத் அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்பட்டது. அந்த ஓவரில் சிறப்பாக அடித்து இருந்தால் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்தது. ஆனால் இந்த சர்ச்சை காரணமாக ஹைதராபாத் அணி அடிக்க வேண்டிய ரன் இலக்கு இன்னும் அதிகரித்துக் கொண்டே சென்று, இறுதியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியிடம் தோல்வியை தழுவியது.
களத்தில் நிற்கும் அம்பயரிடம் தோனி தனது அதிருப்தியைக் காட்டுவது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஒரு போட்டியில், தோனி நடுவர் உல்ஹாஸ் காந்தேவிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.