இந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு !

இந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு !
இந்தியா வெற்றிப் பெற 72 ரன் இலக்கு !

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 5 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த அணிகள் மோதிய முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்றது. இதில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில், 311 குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியின் ரோஸ்டன் சேஸ் 106, ஹோல்டர் 52 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 6 விக்கெட் சாய்த்தார்.

பின்னர், இந்திய அணி தனது முதல் இன்னிங்சை விளையாடியது. கே.எல்.ராகுல் 4, புஜாரா 10 ரன்னில் ஆட்டமிழந்தனர். பிருத்வி ஷா, ஒரு சிக்ஸர் 11 பவுண்டரிகளுடன் 53 பந்தில் 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். கேப்டன் விராத் கோலி 45 ரன் எடுத்து அவுட் ஆனார்.  அப்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்திருந்தது. அதன்பிறகு ரஹானே, ரிஷப் பன்ட் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக விளையாடி ரன்களை சேர்த்தனர். பண்ட் 67 பந்திலும், ரஹானே 122 பந்திலும் அரைசதம் அடித்தனர்.

இந்திய அணி இரண்டாம்நாள் ஆட்டநேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 308 ரன் எடுத்திருந்தது. ரஹானே 75, ரிஷப் பன்ட் 85 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர்.  இந்நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. சிறப்பாக விளையாடிய ரஹானே, 80 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஹோல்டர் பந்துவீச்சில் ஹோப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து, கடந்த டெஸ்ட்டில் சதம் அடித்த ஜடேஜா, ரிஷப்புடன் சேர்ந்தார். ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே  ஹோல்டர் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ ஆனார் ஜடேஜா . அடுத்து அஸ்வின் வந்தார்.

இதனையடுத்து சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரிஷப் பன்ட் 92 இல் ஆட்டமிழந்தார். இதனையடுத்து இந்திய அணியின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து வீழ 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜேஸன் ஹோல்டர் 5 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதற்கடுத்து இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தொடக்கத்தில் இருந்தே ஆட்டம் கண்டது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் பிராத்வைட் டக் அவுட்டானார்.

அந்த அணியில் அதிகபட்சமாக அம்பரீஸ் 38 ரன்களை எடுத்தார் மற்றவர்கள் எல்லாம் சொற்ப ரன்களில் வெளியேறினர். இதனையடுத்து வெஸ்ட் இண்டீஸ் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் உமேஷ் யாதவ் 4 விக்கெட்டுகளையும், ஜடேஜா 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இப்போது இந்தியா இரண்டாவது இன்னிங்ஸில் 72 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கியிருக்கிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com