வெங்கடேஷ் ஐயருக்கு பவுலிங் தராதது ஏன்? ஷிகர் தவான் விளக்கம்
அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விளக்கமளித்தார் ஷிகர் தவான்.
இந்தியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 31 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா, கேப்டன் பவுமா 110 ரன்களும், வான்டெர் துஸ்சென் 129 ரன்கள் உதவியுடன் 296 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக பும்ரா 2 விக்கெட்டுகளும், அஸ்வின் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்த போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் ஐயர் ஆல்-ரவுண்டராக விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்ட வேளையில் அவருக்கு ஒரு ஓவர் கூட பந்துவீச வாய்ப்பு வழங்கப்படவில்லை. வழக்கமாக அணியில் இடம்பெற்றிருந்த 5 பந்துவீச்சாளர்கள் ரன்களை வாரி வழங்கிய போதும் அவரை ஏன் பயன்படுத்தவே இல்லை? எனில் எதற்கு அவரை ஆல்ரவுண்டராக இறக்கப்பட்டார்? என்கிற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இதையடுத்து போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஷிகர் தவான், அறிமுக வீரர் வெங்கடேஷ் ஐயருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்படாதது குறித்து விளக்கமளித்தார். அவர் கூறுகையில், ''சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாலும், விக்கெட்டில் சில திருப்பங்கள் ஏற்பட்டதாலும் பந்துவீச அவர் தேவைப்படவில்லை. கடைசியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்டனர். மிடில் ஓவர்களில் விக்கெட் விழாத போது, மீண்டும் முக்கிய பந்துவீச்சைக் கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் எண்ணமாக இருந்தது. பந்துவீச்சாளர்கள் திருப்புமுனையைப் பெற வேண்டும் ஆனால் எங்களால் அதைச் செய்ய முடியவில்லை,
சூழ்நிலையின் தேவைகளுக்கு ஏற்ப நீங்கள் விளையாட வேண்டும், எப்போதும் அணிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும், உங்கள் தனிப்பட்ட விளையாட்டு முக்கியமானது, அதே நேரத்தில் சூழ்நிலை மற்றும் அணிக்காக உங்கள் விளையாட்டை நீங்கள் எவ்வளவு வடிவமைக்க முடியும் என்பதை அறிவது முக்கியம். அணிக்கு ஒரு பார்டனர்ஷிப் தேவைப்பட்டால், நீங்கள் அத்தகைய ஒன்றை உருவாக்க வேண்டும்'' என்று அவர் கூறினார்.