‘கோலியை நான் ஏன் பாராட்டக் கூடாது?’-ஷோயப் அக்தர்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர், அண்மையில் இந்திய கிரிக்கெட் வீரர்களைப் புகழ்ந்து பாராட்டியமைக்காக அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன.
பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் செயல்பாட்டினை வைத்து அக்தர் தனது பாராட்டுகளையும், கருத்துகளையும் சமூக வலைத்தளங்களில் பகிர்வது வழக்கம். இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் ரோஹித் ஷர்மாவை அண்மையில் அக்தர் பாராட்டியிருந்தார். இந்நிலையில் பேட்டி ஒன்றில் இந்திய கிரிக்கெட் வீரர்களை பாராட்டியதற்காக அவரை விமர்சிக்கும் நபர்கள் குறித்து அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு அக்தரும் பதில் அளித்துள்ளார்.
“நான் ஏன் இந்திய வீரர்களையும் விராட் கோலியையும் புகழ்ந்தோ, பாராட்டியோ பேசக்கூடாது?
கோலி இப்போது 70 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். அவருக்கு நிகரான ஒரு கிரிக்கெட் வீரர் இந்த உலகிலேயே இல்லை. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அவர்.
கோலி ஒரு இந்தியர் என்பதால் மட்டுமே நாம் அவரை புகழ்ந்து பேசக் கூடாது என்ற வெறுப்பை மனதில் வைத்துக் கொள்ள வேண்டாம்.
இந்தியாவின் ரோஹித் ஷர்மாவும் சர்வதேச கிரிக்கெட்டின் நட்சத்திர பேட்ஸ்மேன்தான். நாம் ஏன் அவர்களை புகழக்கூடாது?” என தன்னை விமர்சிப்பவர்களை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளார் அக்தர்.