ஜெகதீசனுக்கு பதில் சாம் கர்ரன் ஏன்?: தோனி கொடுத்த விளக்கம்
துபாயில் நடைபெற்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் சென்னையின் வெற்றிக்கு மேட்ச் வின்னராக ஜொலித்தார் சென்னை சூப்பர் கிங்ஸின் ஆல் ரவுண்டர் சாம் கர்ரன்.
பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என கில்லியாக ஜொலித்தார் சாம். வெற்றி பெற்றாக வேண்டிய ஆட்டத்தில் சென்னைக்கு கைகொடுத்த சாம் கர்ரனை சி.எஸ்.கே-வின் சகலகலா வல்லவன் என புகழ்ந்துள்ளார் கேப்டன் தோனி.
இதற்கு முந்தைய ஆட்டத்தில் மிடில் ஆர்டர் வரிசையில் களம் இறங்கி டீசெண்டாக விளையாடிய தமிழக பேட்ஸ்மேன் ஜெகதீசன் இந்த ஆட்டத்தின் ஆடும் லெவன் அணியில் இடம் பிடிக்கவில்லை.
ஜெகதீசன் அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளான நிலையில் அது குறித்தும் விளக்கம் கொடுத்துள்ளார் தோனி…
“ஜெகதீசனை ஏழு அல்லது எட்டாவது பேட்டிங் ஆர்டரில் விளையாட சொல்வது நியாயமல்ல. அதே நேரத்தில் டாப் ஆர்டரில் இந்திய பேட்ஸ்மேன்கள் சரிவர ஜொலிக்காததால் எக்ஸ்டரா ஸ்பின்னரை பயன்படுத்தினோம்.
பலத்த எதிர்பார்ப்புகளோடு சாம் கர்ரனை ஒப்பனராக களம் இறக்கினோம். அவர் நாங்கள் எதிர்பார்த்தது போலவே சிறப்பாக செயல்பட்டார். வேகப்பந்து வீச்சாளரான அவர் சுழற்பந்தை சிறப்பாக எதிர்கொண்டு பேட் செய்யும் வல்லமை படைத்தவர். அணிக்கு தேவையான 15 முதல் 45 வரையிலான கூடுதல் ரன்களையும் அவர் எடுத்துக் கொடுப்பார். அதனால் சாம் கர்ரனை ஓப்பனிங்கில் இறக்கினோம்” என போஸ்ட் மேட்ச் செரிமணியில் தோனி விளக்கம் கொடுத்துள்ளார்.
21 பந்துகளில் 31 ரன்களும், மூன்று ஓவர்கள் வீசி வெறும் 18 ரன்களை மட்டுமே கொடுத்ததோடு ஒரு விக்கெட்டையும் சாய்த்து இருந்தார் சாம் கர்ரன்.