சாய் கிஷோர், ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது ஏன் ? - சிஎஸ்கே மீது சர்ச்சை..!

சாய் கிஷோர், ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது ஏன் ? - சிஎஸ்கே மீது சர்ச்சை..!
சாய் கிஷோர், ஜெகதீசனுக்கு வாய்ப்பளிக்கப்படாதது ஏன் ? - சிஎஸ்கே மீது சர்ச்சை..!

சென்னை அணியில் இளம் வீரர்களான சாய்கிஷோர் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படாத விவகாரம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி சூப்பரான கம் பேக் கொடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அசத்தலான பல வெற்றிகளை பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதைத்தொடர்ந்து 3 போட்டிகளில் படுதோல்வி அடைந்தது. இதற்கு முக்கிய காரணம் சென்னை அணியின் பேட்ஸ்மேன்களின் சொதப்பலும், பவுலிங்கின் மந்தமும் ஆகும். அத்துடன் ஃபீல்டிங்கிலும் சென்னை அணி பரிதாப நிலையில் தான் இருந்தது.

ஆனால் தோல்விகளுக்கிடையிலும் சென்னை அணியிலும் பெரும் மாற்றங்கள் செய்யப்படவில்லை. ஷேன் வாட்சன், கேதர் ஜாதவ், முரளி விஜய் ஆகியோருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டன. அவர்களால் எந்தப் பலனும் அணிக்கு இல்லை என்ற போதும், மீண்டும் மீண்டும் அவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை மட்டுமின்றி கேள்விகளை எழுப்பியது. இதனால் இன்றைய போட்டியிலாவது இளம் வீரர்களான ரவி ஸ்ரீநிவாசன் சாய்கிஷோர் மற்றும் நாராயண் ஜெகதீசன் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்றைய போட்டியிலும் இருவருக்கும் வாய்ப்பளிக்கப்படாமல் வாட்ஸன் மற்றும் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பளிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கடுப்பான ரசிகர்கள் அப்படி அவர்கள் இருவரும் என்னதான் செய்துவிட்டார்கள் ? என சமூக வலைத்தளங்களில் கொந்தளித்துள்ளனர்.

டிஎன்பிஎல் தொடரில் சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணிக்காக அட்டகாசமாக சுழற்பந்து வீசியிருந்த சாய்கிஷோர் 12 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். அந்தத் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரரே அவர் தான். இதனால் அவர் விஜய் ஹாசாரே கிரிக்கெட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தார். இதனால் அவர் மாநில அளவிலான வீரர்கள் பட்டியலுக்கு முன்னேறிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இவருக்கு சென்னை அணியில் இன்னும் ஒரு வாய்ப்பு கூட கொடுக்கப்படவில்லை.

இதேபோன்று, 2016ஆம் டிஎன்பிஎல் தொடரில் அறிமுகமான நாராயண் ஜெகதீசன் அருமையான பேட்டிங்கை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது அவருக்கு இணையான வயதில் உள்ளவர்களுள் சிறப்பாக ஆடும் வீரர் என்ற பெயரை அவர் பெற்றிருந்தார். அத்துடன் அவர் சூப்பராக கீப்பிங் பார்க்கிறார் என்பதால், அவரது தரம் கிரிக்கெட்டில் உயர்ந்தது. இதன் எதிரொலியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 2018ஆம் ஆண்டு நடந்த ஏலத்தின் மூலம் அவர் எடுக்கப்பட்டார். ஆனால் சென்னைக்கு கீப்பராக தோனி இருப்பதால் அவருக்கு கீப்பிங் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பேட்டிங் வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. இந்த முறையாவது அவருக்கு பேட்டிங் வாய்ப்பு அளிப்பட்டிருக்கலாம்.

மற்ற அணியினர் எல்லாம் இளம் வீரர்களை சூப்பராக பயன்படுத்தி வெற்றிகளை கண்டு வரும் நிலையில் சென்னை அணி மட்டும் மீண்டும் மீண்டும் பழைய வீரர்களுக்கே வாய்ப்பளிப்பது சர்ச்சைகளையும் கிளப்பியுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com