346 கேம்களில் 145 கோல்கள் அடித்த மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ நீக்கம்.. இதுதான் காரணம்!

346 கேம்களில் 145 கோல்கள் அடித்த மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ நீக்கம்.. இதுதான் காரணம்!
346 கேம்களில் 145 கோல்கள் அடித்த மான்செஸ்டரிலிருந்து ரொனால்டோ நீக்கம்.. இதுதான் காரணம்!

மான்செஸ்டர் யுனைடட் கிளப் அணியை குறித்து நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ விமர்சித்ததையடுத்து, உடனடியாக அவரை வெளியேற்றி இருக்கிறது அணி நிர்வாகம்.

போர்ச்சுகல் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ மான்செஸ்டர் யுனைடெட்டை கிளப் அணிக்காக இதுவரை 346 போட்டிகளில் பங்கேற்று 145 கோல்களை அடித்துள்ளார். இந்நிலையில் 2021ஆம் ஆண்டு அவருடன் இரண்டு வருடத்திற்கான ஒப்பந்தத்தை போட்டிருந்த யுனைடட் கிளப் அணியில், கடந்த பிரீமியர் லீக்கில் பங்கேற்று ஆடாமல் இருந்தார் ரொனால்டோ. அதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், அணியின் பயிற்சியாளர் தான் காரணம் என ரசிகர்கள் கூறி வந்தனர்.

இந்நிலையில் அனைத்து சர்ச்சைக்குரிய விசயங்களுக்கும் ஒரு தனிநபருக்கு அளித்த பேட்டியில் மான்செஸ்டர் யுனைடட் அணியை விமர்சித்தும், அணியின் பயிற்சியாளரை சாடியும் உடைத்து பேசியிருந்தார் ரொனால்டோ. அந்த பேட்டிக்கு பிறகான உடனடி நடவடிக்கையாக மான்செஸ்டர் யுனைடட் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டிருக்கிறார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

மான்செஸ்டர் அணியுடனான சர்ச்சை குறித்து முன்னர் கேட்கப்பட்ட போது, “பேசவேண்டிய நேரத்தில் நான் பேசுவேன், ஆனால் மான்செஸ்டர் உடனான விரிசல் போர்ச்சுக்கல் அணியை பாதிக்காது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் மான்செஸ்டர் அணியுடனான விரிசல் குறித்து மேற்கத்திய ஊடகத்திற்கான பேட்டியில் பேசியிருந்த ரொனால்டோ, ”நான் மான்செஸ்டர் யுனைட்டால் காட்டிக் கொடுக்கப்பட்டதாக உணர்கிறேன். எரிக் டென் ஹாக் மீது எனக்கு மரியாதை இல்லை. முந்தைய சீசனுக்கான தொடரில், எனது மகள் உடல்நிலை சரியில்லாததால் நான் பங்கேற்க முடியாது என்று கூறிய போது அவர் என்னை சந்தேகித்தார். அணி வீரர்கள் குடும்பத்தை பற்றி மான்செஸ்டர் யுனைடட் கவலைபடுவதில்லை. அது ஒரு கடிகாரத்தில் நின்று விட்டது. ராய் கீன் எனக்கு கிடைத்த சிறந்த கேப்டன். ஆனால் கேரி நெவில் மற்றும் வெய்ன் ரூனி எனது நண்பர்கள் அல்ல. உலகக் கோப்பைக்குப் பிறகு நான் தொடர்ந்து மான்செஸ்டர் யுனைடட் அணியில் இருப்பேனா என்று எனக்குத் தெரியவில்லை”என்று பேசியிருந்தார்.

கிளப்பை குறித்து ரொனால்டோ விமர்சித்து பேசியதை அடுத்து ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது மான்செஸ்டர் யுனைடட், அதில் “பரஸ்பர உடன்படிக்கையின் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ,மான்செஸ்டர் யுனைடெட்டை விட்டு வெளியேற உள்ளார்.

ஓல்ட் ட்ராஃபோர்டில் 346 தோற்றங்களில் 145 கோல்களை அடித்த அவரது மகத்தான பங்களிப்பிற்காக கிளப் அவருக்கு நன்றி தெரிவிக்கிறது, மேலும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எதிர்காலம் குறித்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறது.

மான்செஸ்டர் யுனைடெட்டில் உள்ள அனைவரும் எரிக் டென் ஹாக்கின் கீழ் அணியின் முன்னேற்றத்தைத் தொடர்வதிலும், ஆடுகளத்தில் வெற்றியை வழங்குவதற்கு ஒன்றிணைந்து செயல்படுவதிலும் கவனம் செலுத்துகின்றனர்” என்று கூறப்பட்டுள்ளது.

2022 உலகக்கோப்பையின் போர்ச்சுக்கல் முதல் போட்டி நாளை 9.30 மணிக்கு தொடங்கப்பட உள்ள நிலையில், மான்செஸ்டர் யுனைடட் அணியின் இந்த அறிவிப்பு ரொனல்டோவை உளவியல் ரீதியாக பாதிக்கும் என்று வல்லுநர்களும் ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com