சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் லெஜண்ட்ஸ் லீக் விளையாட முடியாத தோனி - என்ன காரணம்?

சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் லெஜண்ட்ஸ் லீக் விளையாட முடியாத தோனி - என்ன காரணம்?
சர்வதேச போட்டிகளில் ஓய்வை அறிவித்தாலும் லெஜண்ட்ஸ் லீக் விளையாட முடியாத தோனி - என்ன காரணம்?

சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தாலும், கிரிக்கெட் ஜாம்பவான்கள் பங்கேற்கும் லெஜண்ட்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனியால் பங்கேற்க முடியாத சூழல் உள்ளது. ஏன் என்று சுருக்கமாக பார்க்கலாம்

முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பங்குபெறும் லெஜண்ட்ஸ் லீக் டி20 என்று அழைக்கப்படும் எல்.எல்.சி. போட்டி கடந்த ஆண்டு (2022) துவங்கப்பட்டது. இந்த லீக்கில் இந்தியா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னாள் வீரர்கள் பங்குபெற்று விளையாடி வருகின்றனர். இந்த டி20 லீக்கின் ஆணையாராக இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரும், முன்னாள் வீரருமான ரவி சாஸ்திரி உள்ளார். மேலும் இந்த லீக்கின் விளம்பரத் தூதரராக பாலிவுட் மூத்த நடிகர் அமிதாப் பச்சன் இருந்து வருகிறார்.

இந்திய மஹாராஜா, ஆசியா லயன்ஸ், வேர்ல்ட் ஜெயண்ட்ஸ் என 3 அணிகளாக பிரிக்கப்பட்டு கடந்த ஆண்டு ஜனவரி மாதம், முதல் சீசன் ஓமனில் நடைபெற்றது. இதில் ஆசியா லயன்ஸ் அணி முதல் கோப்பையை கைப்பற்றிய நிலையில், இரண்டாவது சீசன் இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது சீசன் கத்தாரில் தற்போது கடந்த 10-ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

இதில் இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பங்குபெற்றுள்ள இந்திய மஹாராஜாஸ் அணிக்கு கௌதம் கம்பீர் தலைமை தாங்குகிறார். அந்த அணியில் ஸ்ரீசாந்த், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ராபின் உத்தப்பா, பின்னி, பிரவீன் குமார் உள்ளிட்ட பங்குபெற்றுள்ளனர். பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஷாகித் அஃப்ரிடி தலைமையில் ஆசியா லயன்ஸ் அணியும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் வேர்ல்ட் ஜியாண்ட்ஸ் அணியும் மோதி வருகின்றன.

இந்தப் போட்டியில் தோனியுடன் சர்வதேச போட்டிகளில் ஒரே அணியிலும், எதிர் அணியிலும் விளையாடிய பல வீரர்கள் பங்குபெற்றுள்ள நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு சர்வதேசப் போட்டிகளில் ஓய்வை அறிவித்தப் பின்னரும் தோனியால் பங்கேற்க முடியாது; சொல்லப்போனால் அவரே விரும்பினாலும் கூட இந்த லீக்கில் அவரால் தற்போது விளையாட முடியாது. ஏனெனில், தோனி இப்போது பிசிசிஐ-ல் நடத்தப்படும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை அணி சார்பாக விளையாடி வருகிறார். இதனால் அவர் எந்த லீக் போட்டியிலும் விளையாட முடியாது.

பிசிசிஐ விதிகளின்படி, வெளிநாட்டு லீக்குகள் அல்லது வேறு எந்த லீக்களிலும் விளையாட தகுதி பெற வேண்டுமெனில், ஒரு வீரர் இந்திய கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக விலக வேண்டும். அதாவது சர்வதேச கிரிக்கெட் மட்டுமின்றி பிசிசிஐ-ல் நடத்தப்படும் ஐபிஎல் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளும் அதில் அடங்கும். ஆனால் தோனி சர்வதேச கிரிக்கெட் மற்றும் உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை கைவிட்ட நிலையில், தொடர்ந்து ஐபிஎல் விளையாடி வருகிறார்.

தோனி இன்னும் பிசிசிஐயின் கீழ்தான் விளையாடுகிறார். அதனால் லெஜண்ட்ஸ் லீக் உள்பட எந்த வெளிநாட்டு லீக் போட்டியிலும் பங்கேற்க முடியாது. ஒருவேளை தோனி ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றால், அதன்பிறகு எந்த லீக் போட்டியில் வேணாலும் அவர் விளையாட அனுமதிக்கப்படுவார். ஐபிஎல் 16வது சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தோனி வழிநடத்துகிறார். இந்த சீசனுடன் அவர் ஓய்வுபெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பிறகு எந்த லீக் போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட்டாலும் அவர் தொடர்ந்து விளையாடுவரா, மாட்டாரா என்பது தெரியவில்லை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com